கோலாலம்பூர், பிப் 4 – பத்திரிகையாளரும் , புதுக் கவிதையாளருமான மறைந்த அக்கினி சுகுமாரின் இறையாய் இரு கனா என்ற கவிதை தொகுப்பு அனைவரும் படிக்க வேண்டிய நூல் என ம.இ.காவின் தேசிய துணைத் தலைவரும், மனித வள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார். ஆதி குமணன் பாசறையில் வளர்ந்த காரணத்தினால் நமது சிந்தனையை தட்டி எழுப்பக்கூடிய அற்புதமான கவிதைகளை அக்கினி படைத்துள்ளதை பார்க்க முடிகிறது. புதுக்கவிதை துறையில் கால் பதிக்க விரும்புபவர்களுக்கு அக்கினியின் கவிதை தொகுப்பு பெரும் பயனாக இருக்கும் என சரவணன் தெரிவித்தார்.
தமக்கும் அக்கினிக்கும் சில காலம் மட்டுமே பழக்கமாக இருந்தாலும் நல்ல பண்பாளராகவும் நட்புக்கு மரியாதை கொடுப்பவராகவும் விளங்கியதை மறக்க முடியாது. அரசியலில் வேறு தடத்தில் இருந்ததால் அக்கினி மற்றும் அவரது ஆசான் ஆதி குமணன் போன்றவர்களிடம் அதிக காலம் பழக முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் தமக்கு இப்போதும் இருப்பதாக நேற்று தலைநகர் கிராண்ட் பசிபிக் ஹோட்டலில் இறையாய் இரு கனா நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றியபோது டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
அக்கினியின் எழுத்துக்கு ரசிகராக இருந்த தாம் 2015 ஆம் ஆண்டு அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்ததோடு அது அவருடன் வலுவான நட்பு உருவாகுவதற்கு வழிவகுத்ததாக வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்துசாமி தெரிவித்தார். பத்திரிகை துறையில் அவர் நீண்ட காலம் பணியாற்றியிருந்தாலும் வணக்கம் மலேசியாவில் இணைந்த சில நாட்களில் முற்றிலும் மாறுபட்ட ஊடகமான இணையத்தள பதிவேட்டில் தொழில் நுனுக்கங்களை விரைவாக கற்றுக்கொண்டது குறித்தும் தமக்கு வியப்பை ஏற்படுத்தியதாக தியாகராஜன் தெரிவித்தார்.
சுமார் முன்றரை ஆண்டு காலம் வணக்கம் மலேசியாவில் பணியாற்றிய காலத்தில் அதன் வளர்ச்சிக்கு அவர் ஆதரவாகவும் ஒத்துழைப்பாகவும் இருந்து வந்தார். அவர் மறைந்தபோதிலும் அவரது எழுத்துக்கள் என்றும் இளைய தலைமுறையினருக்கு உத்வேகத்தை கொடுப்பதாக இருக்கும் என்றும் தியாகராஜன் தமதுரையில் அக்கினிக்கு புகழாரம் சூட்டினார்.
பத்திரிகை உலகில் எங்களுக்கு எல்லாம் நல்ல வழிகாட்டியவாக திகழ்ந்தவர் அக்கினி சுகுமார் என மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.ராஜேந்திரன் தமதுரையில் பாராட்டினார். அக்கினியின் இறையாய் இரு கனா நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கவிதையும் அவருக்குள் இருந்த போராட்ட உணர்வை உணர்த்துவதாக இருப்பதாக ராஜேந்திரன் விவரித்தார்.
அக்கினி சுகுமாரின் துணைவியார் பத்மினி தொகுத்து வழங்கிய இறையாய் இரு கனா நூல் வெளியிட்டு விழாவில் டத்தோ சோதிநாதன், தென்றல் வார இதழ் ஆசிரியர் வித்யாசகர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் மோகனன் பெருமாள் , தமிழ் மலர் பத்திரிகையின் சின்னராசு, நிர்மலா ராகவன் ஆகியோரும் சிறப்புரை ஆற்றினர். எழுத்தாளர் இளம் தமிழன் நூல் அறிமுகம் செய்ததோடு புதுக்கவிதை துறையில் அக்கினியின் ஆளுமையையும் சிறப்பாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் திருமதி பத்மினி சுகுமார் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இதனிடையே தமது வாழ்நாளில் அக்கினி படைத்த அவரது சிறந்த கவிதைகளை தாம் தொகுத்து வெளியிட்டிருப்பதாகவும் இதற்கான பணியில் ஈடுபட்டபோது பல்வேறு சோதனைகளையும் சவால்களையும் எதிர்நோக்கியபோதிலும் இறுதியில் தமது முயற்சி வெற்றி பெற்றது குறித்து திருமதி பத்மினி சுகுமார் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
அக்கினியின் படைப்புக்கள் காலத்தால் நிற்கும் என்பதற்கு இறையாய் இரு கனா கவிதை தொகுப்பு சிறந்த முன்னுதாரணம் என ஆர்.டி.எம் மின்னல் எப் எம் மின் முன்னாள் தலைவர் பி. பார்த்தசாரதி வருணித்தார். விழுதுகள் நிகழ்வில்தான் அக்கினி எனக்கு அறிமுகம் . அவரிடமிருந்து பல அற்புதமான தகவல்களை தெரிந்துகொண்டதாக கூறுகிறார் ஸ்ரீகுமரன்.