மலாக்கா, அக்டோபர்-12, மலாக்கா பட்டணத்தில் எலியின் கழிவுகளோடு மிகவும் அசுத்தமாக இயங்கி வந்த பிரபல போப்பியா பாசா (popiah basah) கடை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிருப்தியளிக்கும் வகையிலான உணவுத் தயாரிப்புக்காக, மாநில சுகாதாரத் துறை நேற்றிரவு அவ்வுத்தரவைப் பிறப்பித்தது.
சமையலறையில் ஆங்காங்கே எலியின் கழிவுகள் இருந்ததோடு, போப்பியா பாசா செய்ய பயன்படுத்தப்படும் கச்சா பொருட்கள் திறந்தபடியே வைக்கப்பட்டிருந்தன.
அவற்றில் சில, குப்பைத் தொட்டிக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
உணவுகளைக் கையாளும் பணியாளர்களில் ஒருவர் கூட PPE எனப்படும் சுய பாதுகாப்பு மேலங்கியை அணியவில்லை.
பெண் ஊழியர்களோ, உணவுத் தயாரிப்புக்கு சற்றும் பொருந்தாமல் அளவுக்கதிகமாக ஒப்பனையும் அலங்காரமும் செய்திருந்தனர்.
இதையடுத்து அக்கடையை14 நாட்களுக்கு மூடுமாறு உத்தரவிட்ட சுகாதார அதிகாரிகள், அதன் உரிமையாளரிடம் 1,600 ரிங்கிட் மதிப்பிலான 5 அபராத நோட்டீஸுகளை கொடுத்து விட்டுச் சென்றனர்.