மலாக்கா, மே 9 – துப்பாக்கி போன்ற ஆயுதத்தை பயன்படுத்தி, மூன்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், JKR – பொதுப்பணித் துறை திட்ட வரைவாளர், முன்னாள் போலீஸ்காரர் மற்றும் பணி ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேங் பாசின் (Geng Bacin) என அழைக்கப்படும் கும்பலை சேர்ந்த, 36 வயதான JKR புளூபிரிண்ட் கலைஞர், 33 வயது முன்னாள் போலீஸ்காரர் மற்றும் பணி ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் மகனான 38 வயது ஆடவன் ஆகியோர் கைதுச் செய்யப்பட்டதாக, மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ ஜைனோல் சாமா தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்கிழமை அம்மூவரும் கைதுச் செய்யப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
இம்மாதம் ஆறு மற்றும் ஏழாம் தேதிகளில், மலாக்கா தெங்கா மாவட்டத்திலுள்ள, க்ருபோங், டெலோக் மாஸ் மற்றும் தம்பக் பாயாவைச் சுற்றியுள்ள, கேஜெட் கடைகள், பயணப் பை கடைகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை குறித்து கிடைத்த புகார்களை தொடர்ந்து அவர்கள் கைதானார்கள்.
கைதுச் செய்யப்பட்ட மூவருக்கு எதிராக பழைய குற்றப்பதிவுகள் இருப்பதும் தெரிய வந்துள்ள வேளை ; அவர்கள் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததும் சிறுநீர் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து துப்பாக்கியை ஒத்த ஆயுதம், பாராங் கத்தியுடன் இரு கார்கள், மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நான்கு கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விசாரணைக்கு உதவும் பொருட்டு, இன்று தொடங்கி இம்மாதம் 15-ஆம் தேதி வரையில், அம்மூவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.