மலாக்காவில், மாணவர் தாக்கி காயப்படுத்தப்பட்ட சம்பவம் ; விசாரணைக்காக 23 பேர் கைது
மலாக்கா, ஏப்ரல் 5 – மலாக்காவில், 15 வயது மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்த சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு உதவும் பொருட்டு போலீசார் இதுவரை 23 பேரை கைதுச் செய்துள்ளனர். அவர்களில் 20 பேர் பள்ளி மாணவர்கள்.
15 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட அவர்கள் அனைவரும், தஞ்சோங் கிலிங், மாலிம், தஞ்சோங் மிஞாக் ஆகிய பகுதிகளில் கைதுச் செய்யப்பட்டார்கள்.
அவர்களிடமிருந்து மூன்று தலைகவசங்களும், பிரம்பு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்றும், வைரலாகியுள்ளதை போலீஸ் அடையாளம் கண்டுள்ளதாக, மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ வீரா ஜைனோல் சமா தெரிவித்தார்.
அச்சம்பவம் தொடர்பில், மார்ச் 31-ஆம் தேதி, பாதிக்கப்பட்ட மாணவனின் 65 வயதான பாட்டி போலீஸ் புகார் செய்ததோடு, உடலில் காயங்களுக்கு இலக்கான அம்மாணவன் தற்சமயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையும் வீரா உறுதிப்படுத்தினார்.
பழைய கருத்து வேறுபாடு காரணமாக கும்பல் ஒன்று அம்மாணவரை தாக்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.