
மலாக்கா, நவ 8 – மலாக்காவில் தாமான் மலாக்கா ராயாவில் குறைந்த விலை தங்கும் விடுதியில் மலாக்கா குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு பாலியல் தொழிலாளி ஒருவர் அந்த தங்கும் விடுதியின் ஜன்னலில் ஏறி தப்ப முயன்றார். மாலை மணி ஆறு அளவில் அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது 27 வயதான பெண் ஒருவர் தரையிலிருந்து ஆறு மீட்டர் உயரத்திலிருந்து ஜன்னலில் ஏறி கீழே குதித்ததாக மாநில குடிநுழைவு இயக்குனர் அனிர்வான் ஃபௌஸி முகமட் ஐனி தெரிவித்தார்.
நான்கு அதிகாரிகள் மற்றும் 18 பணியாளர்கள் மேற்கொண்ட பரிசோதனையின்போது அந்த தங்கும் விடுதியின் பின்புறப் பகுதி வழியாக தப்பியோட முயன்ற அப்பெண் பிடிபட்டார். சமூக வலைத்தளங்கள் மூலமாக பாலியல் சேவையை வழங்கும் இதர 12 சட்டவிரோத குடியேறிகளும் இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டதாக அனிர்வான் ஃபௌஸி தெரிவித்தார். அந்த தங்கும் விடுதியில் வெளிநாட்டு பெண்கள் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.