கோலாலம்பூர், டிசம்பர்-22, UM எனப்படும் மலாயாப் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் கிளம்பியுள்ள 2 பாலியல் தொல்லைப் புகார்கள் குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு, அதன் நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.
உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ சா’ம்ரி அப்துல் காடிர் அவ்வுத்தரைப் பிறப்பித்துள்ளார்.
அப்புகார்களை ஏனோ தானோ என்று எடுத்துத் கொள்ளாமால், நீதி நிலைநாட்டப்படுவதை UM உறுதிச் செய்ய வேண்டும்.
நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு எதிரான செயல்களை அமைச்சும் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்றார் அவர்.
புகார் பெற்ற முதல் நாளிலிருந்து சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உட்பட தாங்கள் எடுத்து வரும் உரிய நடவடிக்கைகள் பற்றி துணை வேந்தர் தெரிவித்துள்ளார்; புகார் கூறப்பட்ட பேராசிரியரும் போலீசில் புகார் செய்துள்ளார்.
ஆக, அனைவருக்கும் நியாயமாக நடக்க வேண்டும் என்றால் போலீசாரின் விசாரணைக்கு நாம் வழி விட வேண்டும் என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட பேராசிரியர் தனது நிர்வாணப் புகைப்படங்களை மாணவர்களுக்கு அனுப்பியதாக வெடித்துள்ள சர்ச்சை குறித்து அமைச்சர் கருத்துரைத்தார்.
இவ்வேளையில், UM மாணவர்களில் ஐவரில் ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பதாக முன்னாள் மாணவ சங்கம் குற்றம் சாட்டியுள்ளது குறித்தும் உடனடி விசாரணை நடத்துமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்குற்றச்சாட்டு மிகக் கடுமையானது என்பதால் விரிவான விசாரணைத் தேவை.
ஒருவேளை அக்குற்றச்சாட்டு உண்மையென்றால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையில்லை என தெரியவந்தால், பல்கலைக்கழகம் மீது படிந்த கறையைப் போக்கவும் நடவடிக்கை எடுத்து தான் ஆக வேண்டும் என்றார் அவர்.