பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்-21,UM எனப்படும் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஒரு பூனை இறந்துகிடந்த சம்பவம் குறித்து, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
அண்மையக் காலமாக பல்கலைக்கழக வளாகத்தில் பூனைகள் மர்மமான முறையிலும் கொடூரமாகவும் இறந்துகிடக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன.
பல்கலைக்கழக வளாகம் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிச் செய்யும் கடப்பாட்டில் உறுதியாக இருப்பதால், இந்த போலீஸ் புகார் செய்யப்பட்டதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் UM நிர்வாகம் கூறியது.
அங்கு இது இரண்டாவது சம்பவமாகும்; எனவே அவற்றில் மிருகவதை இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அது நம்பிக்கைத் தெரிவித்தது.
பல்கலைக்கழக வளாகத்தில் கைவிடப்பட்ட பிராணிகளைக் கையாளும் முயற்சியில் ‘University Malaya Animal Guardians’ என்ற அமைப்புக்கு ஆகஸ்டில் தாங்கள் அங்கீகாரம் வழங்கியதையும் நிர்வாகம் சுட்டிக் காட்டியது.
இதற்கு முன் மலாயாப் பல்கலைக்கழகத்தின் வர்த்த மற்றும் பொருளாதார கல்விப் புலத்தில் 2 பூனைகள் கொடூரமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் வைரலானது குறிப்பிடத்தக்கது.