
கோலாலம்பூர், பிப் 5 – மலேசியாவில் அழிந்து வரும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்த மலாயா புலிகளின் எண்ணிக்கை நாடு முழுவதிலும் மீட்சிக்கான சாதகமான அறிகுறிகளைக் காட்டுவதாக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் (Nik Nazmi Nik Ahmad ) தெரிவித்திருக்கிறார்.
மலாயா புலிகளின் அதிகாரப்பூர்வமான கணக்கெடுப்புத் தரவு இன்னமும் நிலுவையில் இருந்தாலும் அவற்றின் எண்ணிக்கையில் முன்னேற்றம் இருப்பதாக தொடக்கக் கட்ட கண்டுபிடிப்புகள் காட்டுவதாக அவர் கூறினார்.
ஆகக் கடைசியாக மலாயா புலிகள் தொடர்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் நாடு முழுவதிலும் 150க்கும் குறைவான புலிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
புலிகளின் மொத்த எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையைப் பெறுவதற்கு நாங்கள் காத்திருப்போம், ஆனால் தொடக்கக் கட்ட தரவுகளின் அடிப்படையில், ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்கள் இருப்பது தெரியவருவதாக நிக் நஸ்மி கூறினார்.
அமைச்சு நிலையிலான ஆசியான் தலைவர் பதவி விழாவை தொடக்கிவைத்த பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்போது நஸ்மி இத்தகவலை வெளியிட்டார்.