
கோலாலம்பூர், ஜூன் 30 – மலாய்க்காரர் அல்லாதார் தொடர்பில் அண்மையில் மகாதீர் ஆற்றியிருக்கும் உரை வெறுப்புணர்வை தூண்டுவதாக இருப்பது குறித்து கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான DAP யைச் சேர்ந்த சார்ல்ஸ் சந்தியாகோ சாடியிருக்கிறார். மலேசியாவின் உரிமை மற்றும் அதன் பெயரை மலாய்க்காரர்கள் அல்லாதார் மாற்ற விரும்புவதாக பொய்யான தகவலை மகாதீர் கூறியிருப்பதாக சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார். அவரது இந்த உரை மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. மலாய்க்காரர்கள் உட்பட இந்தியர், சீனர் என அனைத்து சமூகத்தினரும் இணைந்து நாட்டை மேம்படுத்தியுள்ளனர் என்பதை மறுக்க முடியாது. மலாய்க்காரர்களை அங்கீகரிப்பதற்கு மலாய்க்காரர்கள் அல்லாதார் மறுத்து வருவதாக மகாதீர் கூறியிருப்பது அபத்தமான ஒன்று என சார்ல்ஸ் சந்தியாகோ வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.