
மூவார், செப்டம்பர் 4 – மலாக்காரர் அல்லாதவர்கள் தலைமையிலான அரசியல் கட்சிகளை, “பார்ட்டி பெண்டாதாங்” அல்லது வந்தேறிகள் கட்சி என துன் டாக்டர் மஹாதீர் முஹமட் கூறியுள்ளார்.
மலாய் கலாச்சாரத்துடன் ஒத்து போக விரும்பாத மலாய்க்காரர் அல்லாதவர்கள், சொந்த அரசியல் கட்சிகளை உருவாக்கியதோடு, நாட்டில் இனவாதப் பிரச்சனைகளுக்கும் வித்திட்டுள்ளதாகவும் மஹாதீர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற சூழலை தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் நாம் காண முடியாது. ஏனெனில், அங்கு புலப்பெயர்ந்தவர்களுக்காக அரசியல் கட்சிகள் எதுவும் இல்லை.
ஆனால், மலேசியாவில் “வந்தேறிகள்” குடியுரிமை பெற்று வாழ்வதோடு, தங்களை தனித்துக் காட்டவும் முயற்சிப்பதாக, தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய போது, துன் மஹாதீர் சாடினார்.
மலேசியா, மலாய்க்காரர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, மற்றவர்களுக்கும் சொந்தமானது என கூறும் நபரால் வழிநடத்தப்படுவதால், நாட்டை அவர் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க முயல்வதாகவும் மஹாதீர் குற்றம்சாட்டினார்.
அதனால், 3R விவகாரங்கள் குறித்து பேசுவது தமது உரிமை என்பதால், தாம் தொடர்ந்து அது குறித்து பேசப்போவதாகவும், மஹாதீர் சூளுரைத்தார்.