ஜியோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-18 – கிளந்தான் நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் தேசநிந்தனைக்குரியக் கருத்தைப் பேசியிருப்பதாக் கூறி, பினாங்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.என்.ராயர் போலீசில் புகார் செய்துள்ளார்.
பெர்சாத்து கட்சியின் தலைவருமான முஹிடின், மலாய் ஆட்சியாளர்கள் குறிப்பாக பஹாங் சுல்தானைச் சிறுமைப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு எதிராக மக்களை ஏவி விடும் வகையிலும் பேசியிருக்கிறார்.
அரசியல் மேடைகளில் இன – மத மற்றும் ஆட்சியாளர்கள் குறித்து பேச வேண்டாமென, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அரசியல்வாதிகளை நினைவுப்படுத்தியுள்ள நிலையில், மூத்த அரசியல்வாதியான முஹிடின் பொறுப்பற்ற வகையில் நடந்துக் கொண்டுள்ளார்.
எனவே, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள அவரின் பேச்சு குறித்து போலீஸ் விசாரித்து நடவடிக்கை எடுத்திட வேண்டுமென, தமது புகாரில் ராயர் கேட்டுக் கொண்டார்.
15-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அடுத்த அரசாங்கத்தை அமைக்க தமக்கு போதிய ஆதரவு இருந்த போதும், அப்போதைய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா தம்மை ஆட்சியமைக்க அழைக்க மறுத்து விட்டதாக முஹிடின் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சுகளின் வீடியோவை ராயர் ஆதாரமாகக் காட்டினார்.
ஆட்சியமைக்க தமக்கு 115 MP-களின் ஆதரவு இருந்த போதும், 16-வது மாமன்னர் எந்த அடிப்படையில் தம்மை ஆட்சியமைக்க அழைக்கவில்லை என்பது விளங்கவில்லையென, முஹிடின் பேசியிருந்ததாகத் தெரிகிறது.
நெங்கிரி இடைத்தேர்தலில், பாஸ் கட்சியைத் தோற்கடித்து தேசிய முன்னணி தொகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.