
புத்ராஜெயா, மார்ச்-22 – மலாய் மொழி புரியவில்லை என்றால் சீனாவுக்கே திரும்பி போகுமாறு இடைநிலைப் பள்ளி மாணவரை ஆசிரியைத் திட்டியதாகக் கூறப்படும் வைரல் சம்பவத்தைக் கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது.
நாட்டின் கல்விச் சூழலில் இனப்பாகுபாடான பேச்சுக்கும் செயலுக்கும் ஒரு போதும் இடமில்லை என அமைச்சு திட்டவட்டமாகக் கூறியது.
இதையடுத்து அப்பிரச்னைக்கு ஒரு சுமூகமானத் தீர்வைக் காண சம்பந்தப்பட்ட மாணவரின் குடும்பத்துடன் ஒரு சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் கீழுள்ள கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குப் பாதுகாப்பாகவும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் இடமாகவும், பல்லின மத பின்புலங்களை மதிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியது.
முன்னதாக வைரலான ஒலி நாடாவில், அம்மாணவரின் உறவினர் எனக் கூறிக் கொண்ட ஆடவரிடம், அம்மாணவரைச் சீனாவுக்கு போகச் சொன்னது உண்மை தான் என்பதை அந்த ஆசிரியர் ஒப்புக் கொண்டார்.
மாணவனை முட்டாள் என திட்டியதோடு குப்பைத் தொட்டி அருகே போய் அமருமாறும் ஆசிரியர் கூறினாராம்.
தான் அப்படி திட்டுவது இது முதன் முறையல்ல; ஆனால் இதுவரை யாரும் அது குறித்து புகாரளித்தது இல்லை என அந்த ஆசிரியை கர்வத்தோடு கூறிக் கொண்டாராம்.