ஜியோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-22 – மலேசியக் கடப்பிதழைப் பெறுவதற்காக தன்னை 10 வயது சிறுவனாகக் கூறிக் கொண்ட இலங்கை ஆடவனைக் குடிநுழைவுத் துறை கைதுச் செய்துள்ளது.
பினாங்கு, கொம்தார் UTC ஓரிட சேவை மையத்திலிருக்கும் குடிநுழைவுத் துறை அலுவலகத்திற்குச் சென்றவன், மலேசியக் கடப்பிதழுக்கு விண்ணப்பித்தான்.
10 வயது சிறுவன் எனக் கூறிக் கொண்டு அடையாள ஆவணங்களையும் அவன் கொடுத்துள்ளான்.
அவனுடைய தாய் எனக் கூறிக் கொண்ட பெண்ணொருவரும் உடன் வந்திருந்தார்.
எனினும், வயதுக்கும் அவனது பெரிய உடலமைப்புக்கும் சம்பந்தமில்லாதிருந்தது கண்டு அதிகாரிகள் சந்தேகமடைந்தனர்.
அதிகாரிகள் கேட்ட எந்த கேள்வியையும் அவனால் புரிந்துக் கொள்ளவும் முடியவில்லை.
உடனடியாக அவனையும், அவனது ‘தாயையும்’ விசாரித்ததில், மற்ற மலேசிய இந்தியர்களைப் போல அவனால் மலாய் மொழியிலோ அல்லது தமிழிலோ உரையாட முடியவில்லை.
பின்னர், தான் இலங்கையைச் சேர்ந்தன் என்பதை அவன் ஒப்புக் கொண்டான்.
உடன் வந்த மாதுவும், பணத்திற்காக அம்மாவாக நடிக்க வந்ததை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து இருவருமே 1966 கடப்பிதழ் சட்டத்தின் கீழ் கைதாகினர்.