புத்ராஜெயா, செப்டம்பர் -10 – மலேசியக் கடலோர எண்ணெய் துரப்பண மேடை அருகே, அந்நிய நாட்டு கடற்படைக் கப்பலொன்று தென்பட்ட விவகாரத்தை வெளியுறவு அமைச்சு அறியும்.
ஆனால், அந்த இராணுவக் கப்பலின் நடமாட்டம் குறித்த துல்லிய விவரங்களைத் தெரிவிக்க இயலாது என விஸ்மா புத்ரா அறிக்கையொன்றில் கூறியது.
காரணம், அவ்விவகாரம் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைக்கான அதிகாரத் தரப்பின் கீழ் இருப்பதாக அமைச்சு விளக்கியது.
என்றாலும், 1979 மலேசிய வரைப்படத்தின் அடிப்படையில், நாட்டின் கடல்பகுதிகளில் நமது இறையாண்மையையும் சுதந்திரத்தையும் உரிமையையும் கட்டிக் காப்பதில் உறுதியாக இருப்பதாக விஸ்மா புத்ரா கூறியது.
தென் சீனக்கடலில் அமைதியும் நிலைத்தன்மையும் நீடிக்க, சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளையும் அரச தந்திர முறையிலேயே மலேசியா அணுகும்.
உரிமைக் கோரல் உள்ளிட்ட எந்தவொரு பிரச்னைக்கும் அமைதியான முறையில் தீர்வு காண்பதே உத்தமம் என, தனதறிக்கையை விஸ்மா புத்ரா சுருக்கமாக முடித்துக் கொண்டது.