
கோலாலம்பூர், பிப்ரவரி-5 – மலேசியப் பொதுச் சேவைத் துறையில் தற்போது மொத்தம் 47,960 இந்தியர்கள் பணியாற்றுகின்றனர்.
அவர்களில், 255 பேர் உயர் நிர்வாகப் பணிகளிலும், 31,116 பேர் மேலாண்மை மற்றும் தொழில்முறைப் பணிகளிலும், 16,589 பேர் நிர்வாகப் பணிகளிலும் உள்ள அதிகாரிகள் ஆவர்.
மனித வள மேலாண்மை தகவல் அமைப்பில் உள்ள மொத்த 1,266,474 அரசு ஊழியர்களில் இவர்களும் ஒரு பகுதியினர் என, கூட்டரசு பிரதேச விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் Dr சாலிஹா முஸ்தஃபா மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.
இந்தத் தரவுகளில் போலீஸ் மற்றும் இராணுவப் பணியில் இருப்பவர்கள் சேர்க்கப்படவில்லை.
இந்திய சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் புள்ளிவிவரங்கள் மற்றும் அரசுப் பணியில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் எண்ணிக்கையை உயர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
மலாய்க்காரர் அல்லாத அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகளைப் பொறுத்தவரை, கடந்தாண்டு SPA எனப்படும் பொதுச் சேவை ஆணையம் 47 திட்டங்களைச் செயல்படுத்தியது.
அதோடு, நாடு தழுவிய அளவில் 15 சுற்றுப்பயணங்களிலும் பங்கேற்றதாக Dr சாலிஹா கூறினார்.
இந்திய சமூகத்தினரிடையே தொழில் வாய்ப்புகள் மற்றும் அரசாங்க வேலைக்கு ஆள்சேர்ப்பு குறித்த புரிதலை அதிகரிக்க, SPA உயர்கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைக்கும்.
வரும் செப்டம்பரில் பேராக், சுங்கை சிப்புட் இந்தியச் சமூகத்தினருக்காக நடைபெறவிருக்கும் தொழில் சுற்றுலாவும் அதிலடங்கும் என்றார் அவர்.