
கோலாலம்பூர், செப் 16 – மக்கள் இன்று மகிழ்ச்சியாக கொண்டாடும் மலேசிய தினம் நமது ஒற்றுமை, சுதந்திரம், வளர்ச்சி ஆகியவற்றின் அடையாளமாக விளங்குவததோடு மலேசியர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் பொருள் பொதிந்த தினமாகவும் அனுசரிக்கப்படுவதாக ம.இ.கா தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் .
ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கி, நாட்டை உலக அரங்கில் மிளிர வைக்க இலட்சிய இலக்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாடுபட்டு வரும் நிலையில் அவரின் நடவடிக்கைகளுக்கு ம.இ.கா என்றும் ஆதரவளிக்கும். நகைக்கடை, ஜவுளிக் கடை மற்றும் முடிதிருத்தகக் கடை ஆகியவற்றில் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக, இந்திய வணிகர்கள் எதிர்நோக்கிய பிரச்சனைக்கு வழி திறக்கப்பட்டுள்ளதற்கு இந்த வேளையில் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக விக்னேஸ்வரன் கூறினார்.
அதே வேளையில் இந்தியச் சமுதாயத்திற்கான உரிமையைப் பெறுவதில் மஇகா என்றுமே போராடும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்து வருகிறது.
இந்நாட்டு இந்திய சமுதாயம் கல்வி வழி பொருளாதார மேம்பாடு அடைவதைக் காண ம.இ.கா உறுதி பூண்டுள்ளதோடு அதற்காக என்றும் கடுமையாக பாடுபடும்.
சிறந்த தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்களுக்குக் குறிப்பாக, மருத்துவத் துறையில் விண்ணப்பித்தவர்களுக்குப் பொதுப் பல்கலைக்கழகங்களில் வழங்கும் இடப் பிரச்சினைகள் குறித்து, தற்போது பல்வேறு நிலையில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கல்விக்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் போராட்டத்தில் மஇகா என்றுமே பின்வாங்காது.
கட்சியின் புதிய கட்டிட கட்டுமான நடவடிக்கை உறுப்பினர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளதாக சுட்டிக் காட்டிய விக்னேஸ்வரன் கட்சி உறுப்பினர்கள் மற்றும் இந்தியச் சமுதாயத்தின் நலன்களுக்காகவும், பாதுகாப்புக்காகவும் மஇகா என்றுமே ஓர் அரணாக இருந்து சேவையாற்றும் என்று தாம் உறுதி கூறுவதாக தமது மலேசிய தினக் வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியுள்ளார்.