கோலாலம்பூர், நவம்பர்-15 – மலேசியர்களைத் திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டவர்களை இங்கே வேலை செய்ய அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக் கூடும்.
பொருளாதாரத்தை உந்தச் செய்யவும், அந்நியத் தொழிலாளர்களையே அதிகம் நம்பியிருப்பதைத் தவிர்க்கவும் அவ்வாறு செய்யப்படலாம்.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nasution Ismail) அதனைக் கோடி காட்டியுள்ளார்.
நடப்பில், நீண்டகால சமூகப் பயண அனுமதியை வைத்துள்ள வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவியர், வேலை விசா இல்லாமல் இங்கு வேலை செய்யவோ வியாபாரம் செய்யவோ அனுமதிக்கப்படுகிறது.
என்றாலும், கண்மூடித்தனமாக அந்த அனுமதி வழங்கப்படுவதில்லை.
விண்ணப்பத்தாரர்கள் குறிப்பிட்ட சில விதிமுறைகளைக் கட்டாயம் பூர்த்திச் செய்ய வேண்டியிருப்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
கடந்தாண்டு மட்டும் அத்தகையை 161,531 பெர்மிட்டுகள் மலேசியர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைகளுக்கு வழங்கப்பட்டன.
நாட்டிலுள்ள வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவியர் தொடர்பான கொள்கையை அரசாங்கம் மறு ஆய்வு செய்யுமா என மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு சைஃபுடின் பதிலளித்தார்.
நீண்ட கால சமூகப் பயண பெர்மிட்டுகள், வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவியர் குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியுமென்ற சில கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதாக Family Frontiers எனும் அரசு சாரா அமைப்பொன்று அண்மையில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.