கோலாலம்பூர், நவம்பர் 24 – ஆசிரியரும் எழுத்தாளருமாகிய வனிதா இராமகிருஷ்ணன் மலேசியாவின் முதல் தமிழ்-ஆங்கில இருமொழி பதின்மர் சிறுகதைத் தொகுப்பு நூலை நேற்று, வெளியீடு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழவேள் கோ.சா.கல்வி அறவாரியத்தின் தலைவரும், சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் விரிவுரைஞருமான காவல்துறையின் முன்னாள் ஆணையர் டத்தோ ஸ்ரீ தெய்வீகன் ஆறுமுகம் ‘வியன்’ என்ற இந்நூலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இந்நூல், இணையவழி பகடிவதை, மின் சுருட்டு, போதைப் பொருள், இணைய மோசடி உள்ளிட்ட இன்றைய இளைஞர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களையும் சவால்களையும் எடுத்துரைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளதாக டத்தோ ஸ்ரீ தெய்வீகன் தமதுரையில் தெரிவித்தார்.
22 ஆண்டுகளாக ஆசிரியர் பணியாற்றிவரும் வனிதா எழுதிய இந்நூல் இளைஞர்கள் மனதில் ஊக்கத்தையும், விவேகத்தையும் விதைக்கும் கதைகளை ஒருங்கிணைக்கிறது என அவர் புகழாரம் சுட்டினார்.
இந்நூல் ‘வியன்’ உருவாகிய பின்னணியையும், இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் கருத்துக்களை இணைத்தது குறித்தும், இவ்வாறு ஆசிரியர் வனிதா இராமகிருஷ்ணன் கூறினார்.
இன்றைய இளைஞர்கள், வானத்தைப் போல அகன்ற இவ்வுலகில் கொட்டிக் கிடக்கும் எண்ணிலடங்கா வாய்ப்புகளை நேர்முகச் சிந்தனையோடும் தூரநோக்குச் சிந்தனையோடும் கையிலேந்தி வெற்றி நடை போட வேண்டும் என்பதே ‘வியன்’ நூலின் அவா என்று அவர் தெரிவித்தார்.
ஏறக்குறைய 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் நூலாசிரியரின் மாணவர்களின் படைப்புகளுடன் சிறப்பாக நடந்தேறியது.