கோலாலம்பூர், ஆகஸ்ட்-4, நாட்டின் முதல் மின்சார காருக்கு Proton e.MAS 7 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த Proton e.MAS 7 மலேசிய மோட்டார் வாகனத் துறையின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் என Proton Holdings Bhd தெரிவித்தது.
அதன் முழு அறிமுக விழா இவ்வாண்டு இறுதியில் தான் நடத்தப்படுமென்றாலும், முன்கூட்டியே பெயரை அறிவிக்க முடிவுச் செய்யப்பட்டதாக Proton தலைமை செயலதிகாரி Dr லீ ச்சுன்ரோங் (Li Chunrong) தெரிவித்தார்.
சீனாவின் Geely நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த Proton e.MAS 7, நவீன வாழ்க்கை முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, போதுமான இடவசதி மற்றும் பயன்பாட்டை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள SUV segment C ரக காராகும்.
புரோட்டானின் இந்த முதல் EV மாடலானது மேம்பட்ட GMA இயங்குதளத்தில், சிறந்த வாகன செயல்திறன், சிறந்த கையாளுதல் மற்றும் போதுமான வசதியை உறுதிச் செய்கிறது.
4,615 மில்லி மீட்டர் நீளம், 1,901 மில்லி மீட்டர் அகலம், 1,670 மில்லி மீட்டர் உயரம் மற்றும் 2,750 மில்லி மீட்டர் வீல்பேஸ் (wheelbase) ஆகிய பரிமாணங்களுடன், e.MAS 7 தற்கால வெளிப்புற வடிவமைப்புடன் போதுமான உட்புற இடத்தையும் வழங்குகிறது.
காரின் உட்புறம் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களோடு வடிவமைக்கப்பட்டுள்ளது; அந்த புத்தாக்கம் நிச்சயம் வாடிக்கையாளர்களின் மனதைத் தொடும் வகையிலிருக்குமென லீ ச்சுன்ரோங் நம்பிக்கைத் தெரிவித்தார்.
வரக் கூடிய மாதங்களில் மேற்கொண்டு அதன் சிறப்புகள் வெளியிடப்படுமென்றார் அவர்.