கோலாலம்பூர், நவம்பர்-19 – ‘மலேசியாவில் தயாரிக்கப்பட்டது’ என்ற அடையாளத்திலிருந்து ‘மலேசியத் தயாரிப்பு’ என்ற அடையாளத்தை நோக்கி நாடு நகர வேண்டிய நேரம் வந்திருப்பதாக, பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி கூறுகிறார்.
வெளிநாடுகளுக்குச் செல்லத் தேவையில்லாமல், இங்கேயே மக்களுக்கு உயர் வருமானம் தரும் வேலை வாய்ப்புகளை இதன் வழி உருவாக்க முடியுமென அவர் சொன்னார்.
‘Made in Malaysia’ திட்டத்தின் கீழ் நடப்பில் இங்குள்ள தொழிற்சாலைகளில் உதிரிப் பாகங்கள் மட்டுமே பொருத்தப்படுகின்றன.
இப்பணியானது, ஊழியர்களுக்குக் குறைந்த ஊதியத்தையே கொண்டு வருகிறது.
அதே, Made by Malaysia என்றால், நாமே பொருட்களைச் சொந்தமாக வடிவமைத்து உற்பத்தி செய்வோம்.
இனி அதை நோக்கித்தான் நாம் பயணிக்க வேண்டுமென ரஃபிசி சொன்னார்.
ஆனால் அதுவொன்றும் எளிதான காரியமல்ல; அதற்கு வெவ்வேறு திறன்கள் தேவையாகும்.
இந்த நோக்கத்திற்காக, உயர் வருமானம் கொண்ட பொருளாதாரத் துறையில் பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய திறமை மேம்பாட்டு சீர்திருத்தங்களின் அவசியத்தை,13-வது மலேசியத் திட்டம் வலியுறுத்துமென்றார் அவர்.