கோலாலம்பூர், ஏப்ரல்-10 மலேசியாவை உன்னத மற்றும் கண்ணியமான நிலைக்கு உயர்த்திட, இன-மத வேறுபாடு பாராமல் சமூகத்தின் அனைத்து மட்டத்தினரின் வலிமையும் அர்ப்பணிப்பும் தேவை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
எந்தக் காரணத்திற்காகவும், பெரும்பான்மையோ அல்லது சிறுபான்மையினரோ, எந்தவொரு இனத்தையும் ஒதுக்கி வைக்கவோ பகைக்கவோ கூடாது.
வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை, மற்றவர்களின் கலாச்சார முறைகளையும் வாழ்க்கை முறைகளையும் சிறுமைப்படுத்தவோ, அவமதிக்கவோ அல்லது சேதப்படுத்தும் வாய்ப்பாகவோ கருதக் கூடாது என மலேசியர்களுக்கான தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் டத்தோ ஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.
நாம் அனைவரும் தவறு செய்திருப்போம்; ஆகவே Maaf Zahir Batin என்ற மலேசியர்களுக்கே உரித்தான உணர்வின் அடிப்படையில்
ஒருவருக்கொருவர் மன்னிப்பு கோருவதற்கான சிறந்த வாய்ப்பாக, இந்த Aidilfitri-யை பயன்படுத்திக் கொள்வோம் என பிரதமர் அழைப்பு விடுத்தார்.
தனது பேச்சில், செயலில்
ஏதேனும் தவறுகள் இருப்பின், அதற்காக நாட்டு மக்களிடத்தில் இந்நன்னாளில் தாம் மன்னிப்பு கோருவதாக டத்தோ ஸ்ரீ அன்வார் சொன்னார்.
பெருநாள் கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர் திரும்பும் மக்கள், பாதுகாப்பாகப் பயணத்தை மேற்கொள்ளுமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.