கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 – 5 நாட்கள் 96 மணி நேரங்கள் இடைவிடாது முடிவெட்டி, டாஸ் ஸ்கீல் அகடாமியின் 21 இந்திய இளைஞர்கள், இன்று வெற்றிகரமாக மலேசியா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.
கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி காலை 10 மணி முதல், இன்று 26ஆம் திகது காலை 10 மணி வரை மொத்தம் 2,030 பேருக்கு முடிவெட்டி இச்சாதனையைப் இவர்கள் படைத்துள்ளனர்.
வெளிநாட்டினர் பலரும் முடிவெட்டும் தொழிலை ஆக்கிரமித்து வரும் நிலையில், தற்போது டாஸ் ஸ்கீல் அகாடமியின் வழி, மீண்டும் இந்தியத் தலைமுறையினர் இந்த தொழிலில் பீடு நடை போடுவார்கள் என வாழ்த்துக் கூறி பாராட்டினார் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ நெல்சன்.
பல சவால்களைக் கடந்தும் தனது மாணவர்கள், அயராது முடிவெட்டி சாதனை படைத்தது, அவர்களின் திறனோடு முயற்சியையும் தன்னம்பிக்கையையும் படம்பிடித்துக் காட்டுவதாக டாஸ் ஸ்கீல் அகடாமியின் தோற்றுநரும் இயக்குநருமான காளிதாஸ் கூறினார்.
ம.இ.கா பத்து தொகுதி இளைஞர் மற்றும் புத்ரா அணியும், பத்து மலையில் இயங்கி வரும் டாஸ் ஸ்கீல் அகடாமியின் கூட்டு முயற்சியில், இச்சாதனை எந்த தங்கு தடையுமின்றி படைக்க முயன்றது.
இந்நிலையில், இந்திய இளைஞர்களின் சாதனைக்காக ம.இ.கா தேசிய தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் வழங்கிய ஆதரவுக்கு ம.இ.கா இளைஞர் மற்றும் புத்ரா பிரிவு தலைவர்கள் நன்றிகளைச் சமர்ப்பித்தனர்.
இதனிடையே, இன்று வெற்றிகரமாகச் சாதனையைக் கைப்பற்றிய இந்த இளைஞர்கள் தங்களின் மகிழ்ச்சியான தருணத்தை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.மலேசியாவிலேயே முதன்முறையாக ஐந்து நாட்கள் இடைவிடாது முடிவெட்டி சாதனை படைத்த இளைஞர்கள் எனும் பெருமை இவர்களையே சாரும்.
மிகவும் துடிப்புடன் தங்களின் இலக்கை நோக்கி பயணித்து வெற்றிகண்ட 21 இளைஞர்களுக்கும், இன்று மலேசியா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தச் சான்றிதழ் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.