
கோலாலம்பூர், ஜன 19 – மலேசியா தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக முன்னேற்றம் காண்பதற்கு அரசியல் நிலைத்தன்மை மிகவும் முக்கியம் என மேன்மை தங்கிய பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா தெரிவித்திருக்கிறார். அரசியல் நிலைத்தன்மையின்றி மலேசியா முன்னேற்றத்தை அனுபவிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார். அரசியல் நிலைத்தன்மை இருந்தால் நீண்ட கால அடிப்படையில் நமது திட்டங்களில் கவனம் செலுத்தலாம். இதன்வழி முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் கொள்கைகளை வரைந்து அதனை விவேகமான முறையில் அமல்படுத்த முடியும் என சுல்தான் நஸ்ரின் ஷா கூறினார்.
மலாயா பல்கலைக்கழகத்தில் “Malaysia’s Leap into the Future: The Building Blocks Towards Balanced Development” என்ற புத்தகத்தை வெளியீடு செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் இதனை தெரிவித்தார். மலாயா பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் Dr Rajah Rasiah, காலஞ்சென்ற பேராசிரியர் Dr Cheong Kee Cheok மற்றும் பேராசிரியர் Tan Sri Dr Kamal Salih ஆகியோர் அந்த புத்தகத்தை எழுதியுள்ளனர்.