கோலாலம்பூர் – மலேசிய இந்தியக் கலைஞர்களின் படைப்புகளை அதிகரிக்க அரசாங்கம் தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் என தொடர்புத் துறை அமைச்சு உறுதியளித்துள்ளது.
அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய ஒலிபரப்புத் துறை (RTM), மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (FINAS) மற்றும் MyCreative Ventures தொடர்ந்து, இந்தியர்கள் உள்ளிட்ட மலேசியக் கலைஞர்களின் படைப்புகளை மேம்படுத்தவும், அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நிதி மற்றும் மானிய வசதிகள், கலைஞர்களின் படைப்புகளை சந்தைப்படுத்துதல், திறன் மேம்பாடு போன்ற பல்வேறு முயற்சிகள் அமைச்சின் வழி தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக அதன் துணையமைச்சர் தியோ நீ சிங் மேலவையில் தெரிவித்தார்.
2015 தொடங்கி தற்போது வரை அமைச்சின் ‘இலக்கவியல் நிகழ்ச்சிக்கான நிதி’ (டிகேடி) மூலம் கலை ஆர்வலர்களுக்கு மானிய வசதிகளையும் வழங்கி வருவதாக அவர் சொன்னார்.
தற்போது, அமைச்சின் கீழ், FINAS மலேசிய திரைப்படத் துறைக்கும், MyCV மலேசிய இசைத் துறைக்குமான டிகேடி திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ கூறினார்.
மலேசிய இந்தியக் கலைஞர்கள் கோவிட் காலத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களின் வருமானத்தை ஆதரிப்பதற்கான தொடர்பு அமைச்சின் முயற்சிகள் குறித்த செனட்டர் டத்தோ டாக்டர். நெல்சன் ரெங்கநாதன் கேள்விக்கு தியோ இவ்வாறு பதிலளித்தார்.
MyCV மூலம் தொடர்பு அமைச்சு CENDANA, தேசிய பொருளாதார மீட்புத் திட்டம் (PENJANA), மலேசிய படைப்பாற்றளுக்கான ஊக்கத் தொகுப்பு (PRISMA) மற்றும் மக்கள் பாதுகாப்பு, பொருளாதார மீட்புத் தொகுப்பு (PEMULIH) ஆகியவற்றின் கீழ் பல்வேறு நிதி திட்டங்கள் மலேசிய கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
“இதில் மட்டும், இந்தியர் உள்ளிட்ட மலேசிய கலைஞர்களுக்கு டிகேடி இசைத் துறைப் பிரிவில் 2022-இல் RM 600,000.00, 2023-இல் RM 730,400.00 நிதி ஒதுக்கீட்டில் பல கலைஞர்கள் பயன் பெற்றுள்ளனர்” என்றார் அவர்.
MyCV நிர்வாகத்தின் கீழ் உதவி திட்டங்களைப் பெறும் கலைஞர்களின் தேர்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதாகவும் துணை அமைச்சர் தெரிவித்தார்.