கோலாலம்பூர், அக்டோபர்-14 – MAHIMA எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையின் புதியத் தலைவராக டத்தோ என். சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற அதன் ஈராண்டு பொதுக் கூட்டத்தின் போது அவர் ஏகமனதாக அப்பொறுப்புக்கு தேர்வாகியதை, முன்னாள் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா அறிவித்தார்.
MAHIMA மேலும் துடிப்புடன் செயல்படவும், அடுத்தக் கட்டத்தை நோக்கிச் செல்லவும் இனி அது இளைஞர்களின் கையில் இருப்பதே சரியாக இருக்குமென தான் ஸ்ரீ நடராஜா சொன்னார்.
புதியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டத்தோ சிவகுமார், நாடளாவிய நிலையிலுள்ள ஆலயங்களின் நிலைகளைக் கண்டறிய roadshow மாதிரியான சந்திப்புகளை நடத்துவது, இணைய அகப்பக்கத்தைத் திறப்பது உள்ளிட்டவை தனது தலையாயத் திட்டங்கள் என்றார்.
இவ்வேளையில் MAHIMA துணைத் தலைவராக டத்தோ செல்வகுமார் மூக்கையா, 3 உதவித்தலைவர்களாக டத்தோ கிருபாகரன், டத்தோ அழகன், டத்தோ சேது ஆகியோர் தேர்வாகினர்.
MAHIMAவின் ஆலோசகர்களாக டான் ஶ்ரீ நடராஜாவும், ம.இ.கா துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ சரவணன் அவர்களும் செயல்படுவர்.
பொருளாளராக நாராயணசாமியும், செயலாளராக கிருஷ்ண ராவும், உதவிச் செயலாளராக யுவராஜாவும் அறிவிக்கப்பட்டனர்.
31 ஆலயங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இன்றைய பொதுக் கூட்டத்தில், 16 நிரந்தர உறுப்பினர்களைத் தவிர்த்து, நிர்வாகச் சபை உறுப்பினர்களாக 15 பேர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.