கோலாலம்பூர், பிப் 15 – இந்தியா தனது எல்லையை திறந்தாலும் மலேசிய எல்லை திறக்கப்படாதவரை குறைந்த செலவில் இந்தியா செல்ல முடியாத சூழ்நிலை மலேசியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் அனைத்துலக எல்லையை திறப்பதற்கு இந்தியா தற்போது முடிவு செய்துள்ளது. சில காரணங்களால் மார்ச் மாதம் இந்தியா தனது எல்லையை திறந்தாலும் மலேசியா எல்லையை திறக்காதவரை பழையபடி குறைந்த செலவில் விமான டிக்கெட்டை வாங்க முடியாது.
கோவிட் தொற்றுக்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட மலேசியர்கள் இந்தியாவுக்கு சென்றால் இனி தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதோடு இந்தியாவுக்கு செல்லும் தடுப்பூசி போட்டுக்கொண்ட மலேசியர்கள் பயணத்திற்கு முன்னதாக ஆர்டி – பிசிஆர் கோவிட் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையும் இனி கட்டாயமில்லை என்றும் இந்திய அரசு முடிவு செய்துள்ளது. கோவிட் தொற்று மீதான கட்டுப்பாடு அகற்றப்பட்டதால் இந்தியாவுக்கு செல்வதற்கு மலேசியர்கள் பலர் ஆர்வம் கொண்டிருந்தாலும் மலேசிய எல்லை திறக்கப்படாதவரை மலேசிய விமானங்கள் இந்தியாவுக்கு செல்ல முடியாது.
தற்போது வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இங்கு தங்கியிருக்கும் இந்தியர்களை தயாகத்திற்கு கொண்டு செல்வதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரேஸ் விமானம் மட்டுமே மலேசியாவுக்கு பயணச் சேவையை மேற்கொண்டு வருகிறது. மெலிண்டோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் வாரந்தோறும் சிறப்பு வாடகை விமானம் இந்தியாவுக்கு விமானச் சேவையை மேற்கொண்டு வருகிறது. அந்த வாடகை விமானத்தில் ஒரு வழி பயணத்திற்கு 1,500 ரிங்கிட்டும் இரு வழி பயணங்களுக்கு 3,000 ரிங்கிட்டுக்கு மேல் கட்டணம் விதிக்கப்படுகிறது.
குறைந்த பட்சம் ஏப்ரல் மாதத்திற்கு பின்னரே மலேசியாவில் அனைத்துல எல்லை திறக்கப்படலாம் என கூறப்படுகிறது. மலேசிய எல்லை முழுமையாக திறந்து பழையபடி மலேசிய விமானங்கள் இந்தியாவுக்கு விமான சேவைகளை மேற்கொண்டால் மட்டுமே இந்தியாவுக்கான விமானச் சேவை கட்டணங்கள் குறையலாம் என கிள்ளான் கே.பி.எஸ் பயண நிறுவத்தின் நிர்வாக இயக்குனர் கே.பி சாமி கோடிகாட்டினார்.