
புத்ராஜெயா, ஆகஸ்ட் 5 – வெளிநாட்டினரைத் திருமணம் செய்து கொண்டுள்ள மலேசிய பெண்களுக்கு வெளிநாடுகளில் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்குச் சட்டப்படி இயல்பாக மலேசிய குடியுரிமைத் தகுதி கிடைக்காது.
2-1 என பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் கூட்டரசு நீதிமன்றம் இன்று அதனை அறிவித்துள்ளது. இதன் தொடர்பான விவாதத்தில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோஸ்ரீ கமாலுடின் மாட் சாயிட் (Datuk Seri Kamaludin Md. Said)டும், மற்றொரு நீதிபதி டத்தோ அஸிஸா நவாவி (Datuk Azizah Nawawi)யும் அம்முடிவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், டத்தோ S.நந்தபாலன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். எனவே 2-1 என முடிவின் அடிப்படையில் வெளிநாட்டினரைத் திருமணம் செய்துள்ள மலேசிய பெண்களுக்கு வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மலேசிய குடியுரிமைத் தகுதி கிடைக்காது என்ற முடிவு எட்டப்பட்டது.
முன்னதாக வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்து கொண்டு, வெளிநாட்டில் குழந்தைகளை ஈன்றெடுத்த ஆறு மலேசிய பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு இயல்பாக மலேசிய குடியுரிமைத் தகுதி கிடைக்க வேண்டி, உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அவ்வழக்கில் அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்தின் அத்தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம், உள்துறை அமைச்சு, தேசிய பதிவுத் துறையின் தலைமை இயக்குனர் ஆகிய 3 தரப்பினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இம்முடிவு குறித்து கருத்துரைத்திருக்கும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, இம்முடிவானது மலேசிய நீதித் துறைக்கு ஒரு கறுப்பு தினம் என்றார். மலேசிய தந்தையர்களுக்கு இருக்கும் உரிமை தாய்மார்களுக்கு இருப்பதில்லை. பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட கற்காலத்திற்கு இத்தீர்ப்பு நம்மை அழைத்துச் சென்று விட்டது என சார்ல்ஸ் சந்தியாகோ சாடினார். ஆண்களுக்கு நிகரான பெண்களின் சம உரிமையை மட்டும் இத்தீர்ப்பு மறுக்கவில்லை. மாறாக அவர்களது குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், சுதந்திரம் போன்ற உரிமைகளையும் மறுத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.