Latestமலேசியா

குகை உணவகத்தை மூட, கோம்பாக் மாவட்ட நில அலுவலகம் உத்தரவு

கோம்பாக், மார்ச் 15 – சிலாங்கூர், கோம்பாக்கில், 40 கோடி ஆண்டுகள் பழமையான சுண்ணாம்புக் குகைக்குள் செயல்பட்டு வரும் உணவகத்தின் உரிமையாளருக்கு, காலி செய்யும் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

குவா லெபாக் (Gua Lepak) எனும் அந்த உணவகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணையில், அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, கோம்பாக் மாவட்ட நில அலுவலக இயக்குனர் நோர் அஸ்லினா அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.

அந்த உணவகம் சிலாங்கூர் அரசாங்க நிலத்தில் அமைந்துள்ளது. அதனால், 1965-ஆம் ஆண்டு, தேசிய நிலச் சட்டத்தின் கீழ், வெளியேற்ற உத்தரவு பிறக்கப்படவுள்ளதாக அஸ்லினா தெளிவுப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட குகையும் அதனை சுற்றி அமைந்துள்ள பகுதிகளும், அரசாங்க பதிவேட்டில் இடம் பெறச் செய்யப்பட்டுள்ளன.

அங்கு வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட உணவகத்தின் உரிமையாளர் முறையான அனுமதிக்காக ஒருபோதும் விண்ணப்பிக்கவில்லை.

எனவே, அது ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்பதோடு, சட்டபடி குற்றமாகும்.

அதனால், கடந்தாண்டு மார்ச் தொடங்கி அங்கு செயல்பட்டு வரும் அந்த குகை உணவகத்திற்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஐந்து லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது ஐந்தாண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க் ஆக அந்த சுண்ணாம்புக் குகையை அறிவிக்கும் முயற்சிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பலர் அந்த அத்துமீறல் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, “கோம்பாக் குகை உணவகம் விவாதத்தை தூண்டியுள்ளது” எனும் தலைப்பில், இம்மாதம் 11-ஆம் தேதி, உள்நாட்டு பத்திரிக்கை ஒன்று வெளியிட்டிருந்த முகப்புச் செய்தி, அந்த ஆக்கிரமிப்பு பிரச்சனையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!