கோலாலம்பூர், மே-15, மலேசிய மக்கள் தொகை இவ்வாண்டின் முதல் காலாண்டில் 3 கோடியே 40 லட்சம் பேராக பதிவாகியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தோடு ஒப்பிட்டால், அது 2.3 விழுக்காடு அதிகம் என தேசியப் புள்ளியியல் துறை தெரிவித்தது.
மக்கள் கணக்கெடுப்பு, பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் ஆகியவை மீதான காலாண்டு அறிக்கையின் அடிப்படையில் அத்தொகைக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
மொத்த மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் அதாவது 3 கோடியே 60 லட்சம் பேர் மலேசியக் குடியுரிமைப் பெற்றவர்கள்; எஞ்சிய 10 விழுக்காட்டினர் அல்லது 34 லட்சம் பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.
பாலினம் வாரியாகப் பார்த்தால், ஆண்களின் எண்ணிக்கை 1 கோடியே 78 லட்சம் பேராகவும், பெண்களின் எண்ணிக்கை 1 கோடியே 61 லட்சம் பேராகவும் பதிவாகியுள்ளது.
மொத்த மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக மலாய்க்காரர்கள் 57.9 % அல்லது 1 கோடியே 77 லட்சம் பேர் உள்ளனர்.
சீனர்கள் 22.6 விழுக்காடாக உள்ள நிலையில், இந்தியர்கள் 6.6 விழுக்காட்டிலும், மற்ற பூமிபுத்ராக்கள் 12.2 விழுக்காட்டிலும் உள்ளனர்.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் கடந்த ஆண்டை காட்டிலும் மலாய்க்காரர்களின் பிறப்பு விகிதம் 1.2 விழுக்காடு உயர்ந்துள்ளது. இக்காலகட்டத்தில் புதிதாக பிறந்தவர்களில் 68.8 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள்.
ஆனால் சீனர் மற்றும் இந்நியர்களின் பிறப்பு விகிதம் சரிவைக் கண்டுள்ளது.
குறிப்பாக கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் 4.3 விழுக்காடாக இருந்த இந்தியர்களின் பிறப்பு விகிதம் இவ்வாண்டு 3.7 விழுக்காட்டுக்குக் குறைந்திருப்பதாக அவ்வறிக்கைத் தெரிவிக்கிறது.
இறப்பு விகிதத்தை எடுத்துக் கொண்டால், இந்தியர்கள் மத்தியில் அதிக மாற்றமில்லை.
8.5 விழுக்காட்டிலேயே அது நீடிக்கிறது.