கோலாலம்பூர், ஏப் – 7 – எம்.சி.எம்.சி எனப்படும் மலேசிய மருத்துவ மன்றம் பெரிய அளவில் மறுசீரமைக்கப்பட வேண்டுமென செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். மலேசிய மருத்துவ மன்றத்திற்கு எதிராக மூன்று வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால் உடனடியாக அந்த அமைப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மலேசிய மருத்துவ மன்றத்தில் காலியாக இருந்துவரும் அதன் தலைமை செயல் அதிகாரி பொறுப்புக்கு ஒரு ஆண்டுகளாகியும் ஏன் இன்னமும் ஒருவர் நிரப்படவில்லை என்றும் டாக்டர் லிங்கேஸ்வரன் வினவினார். தற்போது மலேசிய மருத்துவர் மன்றத்தை வழிநடத்துவதில் அனுபவம் இல்லாத இடைக்கால தலைமை செயல் அதிகாரி நிர்வகித்து வருவதாக லிங்கேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
மலேசிய மருத்துவ மன்றத்தின் தலவராக சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் ராட்ஸி இருந்தபோதிலும் சுகாதார அமைச்சின் அவரது முக்கிய பணியினால் அதில் அவர் பெரும்பகுதி நேரத்தை செலவழிக்க வேண்டியுள்ளதால் மலேசிய மருத்துவ மன்றத்திற்கு போதுமான பங்கை அல்லது நேரத்தை செலவிட முடியாத நிலையில் இருக்கிறார் என டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
மலேசிய மருத்துவ மன்றத்தின் தலைவர் மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரி ஆகிய இரண்டு பதவிகளுக்கும் தனித்தனியாக அதிகார பகிர்வு இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சிற்கு டாக்டர் லிங்கேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். அதிகாரப் பகிர்வு தனித்தனியாக இருந்தால்தான் மலேசிய மருத்துவ மன்றத்தின் தலைவரும் தலைமை செயல்முறை அதிகாரியும் ஒருவர் மற்றொருவரின் அதிகாரத்தில் தலைலயிடாமல் தனித்துவமாக செயல்பட முடியும் என டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
ஒரே நபரிடம் அதிகாரம் குவியும் பட்சத்தில் அங்கு சர்வாதிகாரம் தலைதூக்கும் என்பதால் அதனை தடுப்பதற்கு அதிகாரப் பகிர்வு அவசியம் என்பதோடு மலேசிய மருத்துவ மன்ற தலைவரும் அதன் தலைமை செயல்முறை அதிகாரியும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களாக இருக்க வேண்டும் என்றும் பினாங்கு சுங்கை பகப் மருத்துவமனையின் முன்னாள் தலைமை இயக்குனருமான லிங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.