கோலாலம்பூர், நவம்பர்-13 – தனது உணவக மற்றும் கரோவோகே தொழில் செழிப்புற்றதால் மனம் மகிழ்ந்த மலேசிய முதலாளி, அதற்கு பங்களித்த ஊழியர்களுக்கு 3.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கார்களைப் பரிசளித்து ஆச்சரியமூட்டியுள்ளார்.
Warakuya Japanese உணவகம் மற்றும் Superstar Family KTV நிறுவனரான John Wong-கே அந்த தாராள குணம் படைத்த தயாளர் ஆவார்.
ஊழியர்களின் கடும் உழைப்பையும் வேலையில் அவர்கள் காட்டும் அக்கறையையும் அங்கீகரித்து ஆண்டுதோறும் அவர்களுக்கு பரிளிப்பதை தான் பழக்கமாக வைத்திருப்பதாக, China Press நாளிதழுடனான பேட்டியில் John Wong கூறினார்.
அவ்வகையில் இவ்வாண்டு 31 ஊழியர்களுக்கு BMW, Audi, Toyota, Honda, Proton போன்ற பிரபல முத்திரைகளைக் கொண்ட கார்களை அவர் பரிசளித்துள்ளார்.
குறிப்பாக நீண்ட நாள் சேவையாற்றிய நால்வருக்கு BMW 6 Series கார்கள் பரிசாக வழங்கப்பட்டன.
நேப்பாளம், மியன்மார் நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் அவர் கார்களைப் பரிசளித்துள்ளார்.
அவர்களுக்கான வாகனமோட்டும் உரிமத்திற்கான கட்டணம் உட்பட அனைத்துச் செலவுகளும் அதிலடங்கும்.
செய்தியைக் கேள்விப்பட்டவர்கள், இவரல்லவா முதலாளி என பாராட்டி மகிழுகின்றனர்.