
கோலாலம்பூர், மார்ச்-16 – மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் நிகழ்வுகளில் மதுபானங்களைத் தடைச் செய்யக் கோரும் தீர்மானம், நேற்றைய அதன் 79-ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது.
சுமார் 400 பேராளர்களில் பெரும்பாலோர் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்ததால் அது தோல்வியடைந்தது.
மலேசிய வழக்கறிஞர் மன்றமும் அதன் மாநிலக் கிளைகளும் தொடர்ந்து மதச்சார்பற்றதாகவே விளங்கிட வேண்டுமென, தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த ஒரு வழக்கறிஞர் கூறினார்.
மது அருந்துவது கல்லீரல் நோய், போதைப் பழக்கம் மற்றும் மனநல பாதிப்புகள் போன்ற உடல்நல அபாயங்களை ஏற்படுத்துவதாக அத்தீர்மானம் சுட்டிக் காட்டியது.
மன்ற நிகழ்வுகளில் மது அருந்துவது தொழில்முறையற்ற நடத்தைக்கு வழிவகுக்கும் என்பதோடு கெட்டப் பெயரையும் கொண்டு வரும்.
எனவே, மதுவை தடை செய்வது மிகவும் இணக்கச் சூழ்நிலையை உருவாக்கி, சில உறுப்பினர்களுக்கு, குறிப்பாக முஸ்லீம் வழக்கறிஞர்களுக்கு அசௌகரியத்தை குறைக்கும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
இதே போன்றதொரு தீர்மானம் 2017-ஆம் ஆண்டும் கொண்டு வரப்பட்டு, பெருவாரியான வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.