ஈப்போ, ஏப்ரல் 9 – பேராக், குனுங் ராபட், தாமான் சைகாட் சுற்றுலாத் தளத்தில், மலையிலிருந்து பாறாங்கல் தலையில் விழுந்ததில், சுற்றுலா வழிகாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
அச்சம்பவம் நேற்று காலை மணி 11.30 வாக்கில் நிகழ்ந்ததை, ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் அபாங் ஜைனால் அபிடின் அபாங் அஹ்மாட் உறுதிப்படுத்தினார்.
அந்த 44 வயது உள்நாட்டு ஆடவர், வியட்நாமிய சுற்றுப் பயணிகளுடன் தாமான் சைகாட் சுற்றுலா தளத்திற்கு சென்றிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
திடீரென மலையிலிருந்து விழுந்த பாறாங் கல்லால், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அச்சம்பவத்தில் குற்றவியல் அம்சங்கள் எதுவும் அடையாளம் காணப்படாததால், அதனை ஒரு திடீர் மரணமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.