
கோலாலம்பூர், மார்ச்-27- ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயத்திற்கு 2 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதை, அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஆலய நிர்வாகத்துக்கு இழப்பீட்டை வழங்குவதாக எந்தவொரு வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை; நிதி அங்கீகரிக்கப்படவும் இல்லையென கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாலிஹா முஸ்தஃபா கூறினார்.
கோயில், 50 மீட்டர் தொலைவில், அருகிலுள்ள இடத்திற்கு மாறும் என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தீர்வைத் தவிர்த்து, வேறு எந்த ஒப்பந்தமும் இல்லையென அவர் தெளிவுப்படுத்தினார்.
எனவே, வைரலாகியுள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றார் அவர்.
கோயில் நிர்வாகம், நில உரிமையாளரான தனியார் நிறுவனம் உள்ளிட்ட தரப்புகளுடன் மேற்கொண்ட பல கட்ட பேச்சுவார்த்தைகளின் பலனாக, நல்லிணக்கச் சூழலில் தீர்வு எட்டப்பட்டுள்ளது.
2020-லிருந்து தள்ளிப்போய் கொண்டேயிருக்கும் மசூதிக் கட்டுமானத்துக்கும் ஒரு விடிவு பிறந்துள்ளது.
எனவே இவ்விஷயத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி மதங்களுக்கு இடையில் வெறுப்புணர்வைத் தூண்டி விடும் வேலையை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திகொள்ள வேண்டுமென அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
கோயில் பிரச்னைக்குத் தீர்வு காண அரசாங்கம் 2 மில்லியன் ரிங்கிட்டை அதன் நிர்வாகத்துக்கு இழப்பீடாக தந்தது உண்மையா என, சர்ச்சைக்குரிய சுயேட்சை சமய சொற்பொழிவாளர் ஃபிர்டாவுஸ் வோங் தனது facebook பதிவில் முன்னதாகக் கேட்டிருந்தார்.
சுமூகமாகத் தீர்க்கப்பட்டுள்ள விஷயத்தை மீண்டும் கிளறி வேடிக்கைப் பார்க்கும் செயலென அதற்கு பரவலாக கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.