
கோலாலம்பூர், மார்ச்-23 – ஜாலான் மஸ்ஜித் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரத்தில் பலர் தீய நோக்கத்துடன் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.
அவர்கள் யாராக இருந்தாலும் அச்செயலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் நினைவுறுத்தியுள்ளார்.
அக்கோயில் விவகாரத்தில் கடந்தாண்டு தொடக்கத்திலிருந்தே சம்பந்தப்பட்டவன் என்ற முறையில், சில உண்மைத் தகவல்களை விளக்க வேண்டிய கடமை தனக்குண்டு என்றார் அவர்.
அவ்வகையில், அக்கோயிலை இப்போதுள்ள இடத்திற்கு 2008-ஆம் ஆண்டு DBKL இடமாற்றியது.
DBKL-லின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு வழி விடுமாறு அப்போதைய அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க கோயில் இடமாறியது.
DBKL-லின் முழு அனுமதியோடு தான் அந்த இடமாற்றமே நிகழ்ந்தது.
இந்நிலையில் கோயில் நிலத்தை பதிவுச் செய்ய 2012-ல் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
பிறகு 2014-ஆம் ஆண்டு அந்த 328-ஆவது லோட் நிலத்தை DBKL தனியாருக்கு விற்று விட்டது.
ஆக இந்த விஷயத்தில் நடந்தது இதுதான்; எனவே ஊரார் நிலத்தில் சட்டவிரோதமாக ஆலயம் அமைக்கப்பட்டிருப்பதாக தான்தோன்றித்தனமாக வீடியோ வெளியிட்டு அதில் குளிர் காயும் செயலை எவராயினும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மாறாக, ஆலய இடமாற்ற விவகாரத்திற்கு நல்லிணக்க முறையில் தீர்வு காண அனைவரும் வழி விட வேண்டுமென பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.
ஊரார் நிலத்தை சொந்தம் கொண்டாடி சட்டவிரோதமாக வழிபாட்டுத்தலங்களை அமைப்பதும், பின்னர் உரிமையாளரிடமே பிரச்னை செய்வதும் வாடிக்கையாகி விட்டதாக, பெர்லிஸ் முஃப்தி Dr Mazaவெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ தொடர்பில் பிரபாகரன் கருத்துரைத்தார்.