தெமர்லோ, செப்டம்பர் -13 – கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் ஓர் உயிரை பலிகொண்ட நில அமிழ்வுச் சம்பவம் ‘தெய்வத்தின் பழிவாங்கல்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு பேராளரை, நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்
மாநகர் மைய நிலத்தில் கூட்டரசு பிரதேச அமைச்சர் என்ன (பாவம்) செய்தாரோ, அதற்கு ‘பிரதிபலனாகத்தான்’ அந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக, தெமர்லோவில் நடைபெறும் பாஸ் இளைஞர் பேராளர் மாநாட்டில் Sharif Azhari பேசியுள்ளார்.
திரு குர்ஆன் கூற்றுப் படி, ‘இறைவனின் பழிவாங்கலில்’ மக்களை பூமிக்குள் மூழ்கடிப்பதும் ஒன்றாகுமென என அவர் கூறிக் கொண்டதாக மலேசியா கினி செய்தி வெளியிட்டுள்ளது.
செய்தியைப் படித்த நெட்டிசன்கள், அவர் சொல்வது உண்மையென்றால், பாஸ் ஆட்சி செய்யும் கிளந்தான் மாநிலத்தில் அடிக்கடி வந்து போகும் பெருவெள்ளமும் ‘இறைவனின் பழிவாங்கல்’ தானோ என காட்டமாக கேட்டனர்.
உங்களுக்கு வந்தால் அது கடவுளின் சோதனை, அதே மற்றவர்களுக்கு என்றால் அது ‘கடவுளின் பழிவாங்கலா’ ? என சிலர் கேட்டனர்.
பெரும்பாலான நெட்டிசன்கள், உயிர் போன விஷயத்தில் தயவு செய்து அரசியல் செய்யாதீர்கள்; அது அநாகாரீகமானது மட்டுமல்ல, தேவையில்லாததும் கூட என அறிவுரை கூறினர்.
Sharif Azhari, தமது அப்பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் பலர் வலியுறுத்தினர்.