
கோலாலம்பூர், மார்ச்-24 – சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயம் உடைக்கப்படாது என DBKL உத்தரவாமளித்துள்ளது.
மாறாக சமூகமான முறையில் கோயிலை இடமாற்றுவதற்குப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கோலாலம்பூர் மேயரே கூறியிருக்கிறார்.
ஆனால், அண்மைய சில தினங்களாக அக்கோயிலை சட்டவிரோதமான இடமாக முத்திரைக் குத்தி, உண்மையை திசை திருப்ப முயற்சி நடப்பது வேதனையளிப்பதாக, மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என்.சிவகுமார் கூறினார்.
அது சிந்தனைக்கு அப்பாற்பட்ட மற்றும் முட்டாள்தனமான கூற்று என அவர் சாடினார்.
நூறாண்டுகளுக்கும் மேலாக அதுவும் மாநகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் ஒரு கோயில் எப்படி சட்டவிரோதமாக முடியும்?
எனவே அவ்வாறு குறைக்கூறுவோர் வாய்க்கு வந்ததை பேசக் கூடாது; சுய மலிவு விளம்பரத்திற்காக கோயிலை இழிவுப்படுத்தக் கூடாது.
ஒருவேளை கோயிலுக்கு பெர்மிட்டோ அனுமதியோ வழங்கப்படவில்லை என்றால், அது அரசாங்கத்தின் தவறாகத்தான் இருக்க முடியும்.
காரணம், தொழில்முறை ரீதியாக அதனை பட்டா எழுதிக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமை என அவர் சுட்டிக் காட்டினார்.
தங்கள் வசதிக்குக் குறைக்கூறுவோர் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்; இங்கு யாரும் சட்டவிரோதமானவர்கள் அல்ல, எந்த நிலமும் சட்டவிரோதமானது அல்ல, எந்த வழிப்பாட்டுத் தலமும் சட்டவிரோதமானது அல்ல; அனைத்தும் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற சொத்து.
மடானி அரசாங்கத்தின் கீழ் எந்த சமயத்தின் வழிபாட்டுத்தலமும் உடைக்கப்படாது என பிரதமட் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமே உறுதியளித்துள்ளார்.
எனவே, நல்லிணக்க அடிப்படையில் கோயில் பிரச்னைக்குத் தீர்வுக் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதனைக் கெடுக்கும் வகையில் யாரும் கருத்துகளைக் கூறி மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாமென, டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.