
கோலாலம்பூர், மார்ச்-27- ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரம், சுமூகமாகவும் நல்லிணக்க அடிப்படையிலும் தீர்க்கப்பட்டுள்ளது.
இது அதன் பக்தர்களுக்கும் இந்நாட்டு இந்துக்களுக்கும் பெரும் மனநிம்மதியைக் கொடுத்திருப்பதாக, சிலாங்கூர் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன் வருணித்தார்.
எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும், பொறுமை, நிதானம், பரஸ்பர மரியாதை ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் எப்படியும் சுமூகத் தீர்வைக் காண முடியும் என்பதற்கு இந்த ஆலய விவகாரமே நல்ல எடுத்துக்காட்டு.
என்னதான், சமூக ஊடகங்களில் சில புல்லுருவிகள் இன – மத உணர்ச்சியைத் தூண்டு விட்டு குளிர்காய நினைத்தாலும், பொருத்தமான அணுகுமுறையின் வாயிலாக நாம் சாதித்துக் காட்டியுள்ளோம்.
அதே சமயம், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகளை நாம் தவிர்க்க வேண்டும்; அதற்காக, கோயில்கள் மற்று மத நிறுவனங்களைப் பராமரிக்க ஒரு தனி நிர்வாக அமைப்பை அமைக்க அரசாங்கம் முன்வர வேண்டுமென, பிரகாஸ் பரிந்துரைத்தார்.
இதனிடையே, ஆலயப் பிரச்னை சுமூகமாகத் தீர்க்கப்படுவதற்கு பங்காற்றிய அனைத்துத் தரப்பினருக்கும் செனட்டர் Dr. லிங்கேஷ்வரன் ஆர். அருணாசலம் நன்றித் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
குறிப்பாக இலக்கவியல் அமைச்சரும் DAP தேசியத் தலைவருமான கோபிந்த் சிங் டியோ அதில் நியாயமான மற்றும் நல்லிணக்கமான தீர்வுக் கிடைக்க முக்கியப் பங்காற்றியுள்ளார்.
அதே சமயம் தேசிய நல்லிணக்கத்திற்கு எவ்வித கீறல்களும் விழாதிருக்கும் வகையில், இப்பிரச்னையை சரியான அணுகுமுறையோடு கையாண்டு தீர்வுப் பிறக்க காரணமாக இருந்துள்ளார் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாலிஹா முஸ்தஃபா.
அவருக்கும் இவ்வேளையில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக லிங்கேஷ் கூறினார்.
சமூக நல்லிணக்கத்தையும் நாட்டின் நிலைத்தன்மையையும் கட்டிக் காக்கும் பொறுப்பை, மடானி அரசாங்கம் மதிநுட்பத்துடன் கையாண்டுள்ளது.
இது தான், பரிவுமிக்க அரசாங்கத்துக்கான அடையாளமாகும் என்றார் அவர்.