
கோலாலம்பூர், மார்ச்-30 – நாட்டில் இந்து ஆலயங்களையும் மற்ற சமய வழிபாட்டுத் தலங்களையும் பதிவுச் செய்ய, முஸ்லீம் அல்லாதோருக்குத் தனித் துறை அமைக்கப்பட வேண்டும்.
மஸ்ஜித் இந்தியா ஆலய இடமாற்ற சர்ச்சையைத் தொடர்ந்து, பி.கே.ஆர் கட்சியின் குவாலா சிலாங்கூர் தொகுதி முன்னாள் தலைவரான திபன் சுப்ரமணியம் அக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தீபகற்பத்தில் அமைந்துள்ள பெரும்பாலான ஆலயங்கள் காலனித்துவ ஆட்சியின் போது கட்டப்பட்டவை; அந்த நேரத்தில் அவை சட்டவிரோதமாகக் கருதப்பட்டன.
எனினும் மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு அவற்றில் ஏராளமானவைப் பதிவுச் செய்யப்படவில்லை; அதற்காக அவற்றை சட்டவிரோதமானவை என சொல்லி விட முடியாது என திபன் சொன்னார்.
எனவே, இது போன்ற ஆலய நில மேலாண்மை விவகாரங்களைக் கவனிக்க தனித் துறை அமைக்கப்படுவதே சிறந்தது என்றார் அவர்.
முஸ்லீம் அல்லாதோரின் விவகாரங்களைக் கையாள பிரதமர் துறையில் தனி அமைச்சு உருவாக்கப்பட வேண்டுமென பிப்ரவரியில் ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் Chow Yu Hui இதே போன்றதொரு பரிந்துரையை முன்வைத்தார்.
எனினும் அதற்கு எதிர்கட்சிகள் மட்டுமின்றி ஒற்றுமை அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான அம்னோவும், அமானாவும் கூட எதிர்ப்புத் தெரிவித்தன.
கடைசியில் அப்பரிந்துரையை அமைச்சரவை நிராகரித்ததாக பிரதமர் கூறினார்.
முஸ்லீம் அல்லாதோரின் விவகாரங்களைக் கையாள ஏற்கனவே ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு இருப்பதால், தனி அமைச்சு தேவயில்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.