
கோலாலம்பூர், செப் 8 – மலேசியாவிலுள்ள அனைத்து இனங்களையும் சமயங்களையும் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி பிரதிநிதிப்பதாக அந்த கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான டத்தோஸ்ரீ அஸ்மின் முகமட் அலி கூறிருப்பதைச் சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா சிறப்புக் குழுவின் தலைவருமான டத்தோ ரமணன் சாடினார். பெரிக்காத்தான் நேசனல் குறிப்பாக பாஸ் கட்சியைக் கண்டு பூலாய் மற்றும் சிம்பாங் ஜெராமைச் சேர்ந்த வாக்காளர்கள் அஞ்ச வேண்டியதில்லையென அஸ்மின் தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருப்பதாக பி.கே.ஆர் தகவல் பிரிவின் துணைத் தலைவருமான ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இன மற்றும் சமய விவகாரங்களை எழுப்பிவரும் வகையில் தனது பிரச்சாரத்தைப் பெரிக்காத்தான் நேசனல் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் அஸ்மின் அலி அல்லது பெரிக்காத்தான் நேசனலை மலேசியர்கள் நம்புவார்கள் என தாம் நினைக்கவில்லை என்று ரமணன் சுட்டிக்காட்டினார்.
பெரிக்காத்தான் நேசனைலை ஆதரிக்கும் துன் மகாதீர் முகமட் மலாய்க்காரர் அல்லாதாரை தொடர்ந்து வந்தேறிகள் என்று முத்திரை குத்தி வருவதோடு இனத் துவேசத்தைக் கொண்ட அனைத்து வகையான குற்றச்சாட்டுகளையும் கூறி வருகிறார். அவரது குற்றச்சாட்டுகள் அபத்தமானதாக இருந்தாலும் அஸ்மின் அலி உட்பட பெரிக்காத்தான் நேசனல் தலைவர்களில் எவரும் டாக்டர் மகாதீரிடமிருந்து விலகவில்லை. மௌனமாக இருப்பதன் மூலம் டாக்டர் மகாதீர் கூறிவரும் கட்டுக் கதைகளைப் பெரிக்காத்தான் நேசனல் ஏற்றுக்கொள்கிறதா என்றும் ரமணன் வினவினார். சிறந்த தலைமைத்துவத்திற்குக் கிளந்தான் முன்னுதாரணமாக இருப்பதாக அஸ்மின் கூறுகிறார். பாஸ் தலைமையிலான கிளந்தான் அரசாங்கம் கடந்த 30 ஆண்டுகாலமாக தூய்மையான நீரை விநியோகிக்க முடியாமல் இருக்கும்போது அது எப்படி சிறந்த அரசாங்கமாக இருக்க முடியும் என்றும் ரமணன் கேள்வி எழுப்பினார். நாட்டின் முன்னேற்றத்திற்காக ஜோகூர் மக்கள் நாளைய இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவாக திரண்டு வாக்களிக்க வேண்டும் என ரமணன் கேட்டுக் கொண்டார்.