
கோலாலம்பூர், மார்ச் 8 – தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்து விவாதிக்க 36 சமூக இயக்கங்கள் அண்மையில் தலைநகர் பிரிக்பீல்ட்ஸில் ஒன்று கூடி சில தீர்மானங்களை நிறைவேற்றின.
அதில், எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படுவதையோ, அருகிலுள்ள பள்ளிகளோடு இணைக்கப் படுவதையோ ஆதரிக்கப் போவதில்லை,
தேசியக் கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்,
கல்வியமைச்சர் அலுவலகத்தில் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த ஓர் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்ற 3 முக்கிய தீர்மானங்களை, ஒருங்கிணைந்த இந்தியர் இயக்கங்கள் கூடி நிறைவேற்றின.
முன்னதாக அந்த கூட்டம் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாடு, நலனபிவிருத்திச் சங்கத் தலைவர் ம. வெற்றிவேலன் தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் ஒளிவிளக்கு அமைப்பின் தேசியத் தலைவர் ஜெயசங்கர் மற்றும் மகேஸ்ராம், சமூக-கல்வி ஆய்வாளரான முனைவர் குமரன் வேலு, மலேசியத் தேர்வு வாரியத்தின் முன்னாள் உதவி இயக்குநர் திரு. பி.எம்.மூர்த்தி, செடிக் வாரியத்தின் முன்னாள் இயக்குநர் குரு என்ற சத்தியா உட்பட மேலும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.