
கோலாலம்பூர், மார்ச் 27 – மாணவர்களுக்கு என ஒரு களத்தை ஏற்படுத்தி , அவர்களது பேச்சாற்றலை பட்டைத் தீட்டி, அனைத்துலக அரங்கில் ஓர் அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்து வரும் , இவ்வாண்டின் ‘அனைத்துலக பேசு தமிழா பேசு ‘ மற்றும் ‘ அனைத்துலக மாணவர் முழக்கம்’ பேச்சுப் போட்டிகள் இறுதிச் சுற்றை எட்டியிருக்கின்றன.
வணக்கம் மலேசியா ஏற்பாட்டில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர் மையத்தின் இணை ஆதரவில் நடைபெறும் இவ்விரு போட்டிகளின், விறுவிறுப்பு நிறைந்த அரையிறுதிச் சுற்று நேற்று இயங்கலை வாயிலாக நடைபெற்றது.
வணக்கம் மலேசியா முகநூல் அகப்பக்கத்தின் வாயிலாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்ட இவ்விரு போட்டிகளின் பங்கேற்பாளர்கள், தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேள்விகளைத் தொட்டு, தங்களது அனல் பறக்கும் விவாதங்களை முன் வைத்தனர்.
தங்களது வாதத் திறமையால் எதிர் போட்டியாளரை திக்கு முக்காட வைத்ததோடு, நடுவர்களின் கேள்விகளுக்கு , தங்களது அறிவாற்றல் மிகுந்த பதிலால் மடக்கியும் பேசி ஆச்சரியப்பட வைத்த பங்கேற்பாளர்கள் , அதிக புள்ளிகளுடன், இறுதி களத்தில் களம் காணவிருக்கின்றனர்.
அவ்வகையில், அனைத்துலக பேசு தமிழா பேசு போட்டியில் பங்கேற்ற 8 பேரில், நால்வர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த மோகன்ராஜ் ஹரிகரன், இந்தியாவைச் சேர்ந்த பாலு ஆனந்த், கனடாவைச் சேர்ந்த நிருத்திகா செல்வநாயகம், மலேசியாவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் சுந்தர் ஆகிய நால்வருக்கு மத்தியிலே, வெற்றியாளருக்கான மகுடத்தை யார் சூடப் போகின்றனர் எனும் கடும் போட்டி நிலவவிருக்கின்றது.
மேலும் , இதன் அரையிறுதியில் கலந்து கொண்டு திறமையாக பேசிச் சென்ற இலங்கையைச் சேர்ந்த அர்ஷகா ரவிக்குமார், இந்தியாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் பழனி ஆகியோர் நட்சத்திர பேச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதனிடையே, அனைத்துலக மாணவர் முழக்கம் போட்டியில் பங்கேற்ற 10 பேரில் நால்வர் இறுதிச் சுற்றில் களம் காணவிருக்கின்றனர்.
மலேசியாவைச் சேர்ந்த பர்வேஷா ஜெயகுமார், இலங்கையைச் சேர்ந்த சுலக்ஷன் தர்மகுலராஜா , இந்தியாவைச் சேர்ந்த அஸ்மிதா ஷேனன் வாட்ஸ் , மலேசியாவைச் சேர்ந்த மற்றொரு போட்டியாளரான டெனிஷா சுப்ரமணியம் ஆகியோர் , சுட்டிச் செல்வங்களாக இருந்தாலும், சிந்திக்க தூண்டும் தங்களது கருத்துகளை , இறுதிகளத்தில் முன் வைக்கவிருக்கின்றனர்.
இவ்வேளையில், இப்போட்டியில் நடுவர்களின் மனங்கவர்ந்த ஜப்பானைச் சேர்ந்த யுவன் ஆசைத் தம்பி, டென்மார்க்கைச் சேர்ந்த பிரணிஸ்கா கிருபாகரன், இலங்கையைச் சேர்ந்த மிஷேல் ஆராதனா லிங்கேஸ்வரன் ஆகியோர் நட்சத்திரப் பேச்சாளர் எனும் விருதினை தட்டிச் சென்றனர்.
முன்னதாக, இவ்விரு போட்டிகளும் மிகச் சிறப்புடன் நடைபெற வணக்கம் மலேசியாவிற்கும், உலக நாடுகளுக்கும் ஓர் இணைப்பு பாலமாக செயல்பட்டு வரும் தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் தமிழ் வளர் மையத் தலைவர் பேராசிரியர் டாக்டர் குறிஞ்சிவேந்தன், வரவேற்புரை ஆற்றி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
6-வது ஆண்டாக நடைபெறும், உயர் கல்வி கூட மாணவர்களுக்கான அனைத்துலக பேசு தமிழா பேசு பேச்சுப் போட்டியும் , 8-வது முறையாக நடைபெறும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான அனைத்துலக மாணவர் முழக்கம் போட்டியும், இதுவரையில் பல திறமையான பேச்சாளர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியதில் மிகவும் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.
அதோடு, தமிழால் உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்கள் குறிப்பாக ஆசியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் ஆகியோரை , இவ்விரு போட்டிகளின் வாயிலாக ஒன்றிணைத்தது, மிக பெருமிதத்தை ஏற்படுத்தியிருப்பதாக வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி தெரிவித்தார்.
வரும்காலத்தில் மிகச்சிறந்த தமிழ் ஆளுமைகளை உருவாக்க வேண்டும் என்பதே இவ்விரு போட்டிகளின் என்றும், அதனை பறைசாற்றும் விதமாக மாணவர்களின் படைப்புகள் ஒவ்வொரு வருடமும் பெருகேறி வருவது மகிழச்சி அளிப்பதாக அவர் கூறினார்.
இதனிடையே, அரையிறுதி வரை தேர்வாகிய போட்டியாளர்கள் அனைவரும் மிகத் திறமையாக தங்களது வாதங்களை முன் வைத்த வேளை, அவர்களில் ஆக சிறந்தவர்களையே இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்வது என முடிவெடுப்பதில் நடுவர்களும் இம்முறை சிரமப் படவே செய்தனர்.
திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் பறிபோய்விடக் கூடாது என்ற நோக்கத்தில் நடுவர்கள் செயல்ப்பட்டனர்.
அவ்வகையில், மலேசியாவைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரும், மலேசிய தமிழ் நெறி கழகத்தின் பொதுச் செயலாளருமான கனல்வீரன், சிங்கப்பூரைச சேர்ந்த தமிழாசிரியர் அருள்மதி லெனின், தமிழ்நாட்டைச் சேர்ந்த கணக்கு வரி ஆலோசகரும் மென்பொருள் ஆசிரியருமான திரு ஆவிச்சி கிருஷ்ணன் ஆகியோர் ‘பேசு தமிழா பேசு’ பேச்சுப் போட்டிக்கான நடுவர்களாக செயல்பட்டனர்.
அதே வேளை, மலேசியாவைச் சேர்ந்த, தனியார் நிறுவனமொன்றின் தலைமை செயல்முறை அதிகாரியும், அங்கீகரிக்கப்பட்ட பயிற்றுநருமான செல்வமலர், தமிழ் நாட்டைச் சேர்ந்த கலை – அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் நா.சங்கரராமன் ஆகியோர், நடுவர்களாக நடுநிலையாக , ‘மாணவர் முழக்க’ பங்கேற்பாளர்களின் ஆற்றலைச் சோதிட்டு புள்ளிகளை வழங்கினர்.
இதன் அடிப்படையில் தேர்வாகி இறுதிச் சுற்றில் வாதங்களை முன் வைக்க காத்திருக்கும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள் !