
கோலாலம்பூர், ஜன 16 – மாநிலத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானுடன் ஒத்துழைப்பது தொடர்பில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவாக இருப்பின், அந்த முடிவு தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளுடன் கலந்து பேசி எடுக்கப்பட்ட ஒரு முடிவாக இருக்க வேண்டும்; மாறாக ஒரு தரப்பு மட்டும் எடுக்கும் ஒரு முடிவாக அது இருக்கக் கூடாது என மஇகா தேசியத் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.
இதனிடையே, அத்தகையதொரு ஒத்துழைப்பை சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் மேற்கொள்வது சாத்தியமா என வினவப்பட்டபோது, இப்போதைய சூழலில் மலேசியாவில் எதையும் செயல்படுத்தக் கூடிய ஒரு நிலையே உருவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன் சாத்தியமில்லை எனக் கூறப்பட்ட விஷயங்கள், இப்போது குறிப்பாக, 15-வது பொதுத் தேர்தலுக்குப் பின் அவை சாத்தியமாகியிருப்பதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
6 மாநிலங்களின் தேர்தலில் தேசிய முன்னணியும், பக்காத்தான் ஹரப்பானும் ஒத்துழைப்பது குறித்து, PKR கட்சியின் துணைத் தலைவர் ரபிசி ரம்லி ( Rafizi Ramli ), சிலாங்கூர் மெந்திரி பெசார் அமிருடின் ஷாரி ( Amirudin Shari) உட்பட சில பக்காத்தான் ஹராப்பான் உயர் நிலை தலைவர்கள் பரிந்துரைத்திருந்தனர்.
அதன் தொடர்பில், மஇகா தலைமையகத்தின் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தின் போது , விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் அவ்வாறு கருத்துரைத்தார் .