ஜோகூர் பாரு, ஜனவரி-8, மாமன்னரை சிறுமைப்படுத்தும் வகையில் X தளத்தில் பதிவிட்ட 55 வயது ஆடவர், இன்று ஜோகூர் பாரு மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
தம் மீது கொண்டு வரப்பட்ட தேச நிந்தனைக் குற்றச்சாட்டை, உணவங்காடி வியாபாரியான Zaidi Mat Sah ஒப்புக் கொண்டார்.
அது தானாக எழுதியப் பதிவு அல்ல; மாறாக வேறொரு பதிவிலிருந்து காப்பியெடுத்து பதிவிட்ட ஒன்றுதான் என்றும், அது 3R அம்சங்களைத் தொடும் என்பதை தாம் அறிந்திருக்கவில்லை என்றும் நீதிமன்றத்திடம் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து அவ்வாடவருக்கு 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 6 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
டிசம்பர் 29-ஆம் தேதி போட்டப் பதிவுக்காக, அந்நபர் டிசம்பர் 30-ஆம் தேதி கைதானார்.
அப்பதிவை வெளியிடப் பயன்படுத்தப்பட்ட அவரின் கைப்பேசியும் முன்னதாகப் பறிமுதல் செய்யப்பட்டது.
அவ்வாடவரின் அப்பதிவு நீக்கப்பட்டு அவரின் X தளக் கணக்கும் முடக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.