புத்ராஜெயா, ஆகஸ்ட் -24 – 16-வது மாமன்னரைச் சிறுமைப்படுத்தியதாகக் கூறப்படும் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் மீதான விசாரணையை, போலீஸ் மற்றும் சட்டத்துறைத் தலைவரிடமே விட்டு விடுவதாகப் பிரதமர் கூறியிருக்கிறார்.
அதில் தாம் தலையிடவில்லை, தலையிடவும் முடியாது என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமருமான முஹிடினை, தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதை சில தரப்புகள் எதிர்ப்பதாகக் கூறப்படுவது குறித்து கேட்ட போது, அன்வார் அவ்வாறு சொன்னார்.
தேச நிந்தனைச் சட்டம் கொடுமையானது;
எனவே பயன்படுத்துவதற்கு அது ஏற்புடையதல்ல என முந்தைய பக்காத்தான் அரசாங்கத்தில் சட்ட விவகாரங்களுக்கான துணையமைச்சராக இருந்த மொஹமட் ஹனிபா மைடின் (Mohamed Hanipa Maidin) கூறியிருந்தார்.
கிளந்தான் நெங்கிரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முஹிடின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி முன்னதாக வீடியோக்கள் வைரலாகின.
பத்தாவது பிரதமராவதற்கு தமக்குப் போதிய ஆதரவு இருந்தும், அப்போதைய மாமன்னரும் பஹாங் சுல்தானுமான அல் சுல்தான் அப்துல்லா தம்மை அப்பதவிக்கு நியமிக்கவில்லை என முஹிடின் கேலி தோரணையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
பஹாங் அரண்மனை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தரப்புகள் போலீசிஸ் புகார் செய்ய, பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முஹிடின் புதன்கிழமை வாக்குமூலம் அளித்தார்.