குவாந்தான், செப்டம்பர்-20, பஹாங், மாரானில் முன்னாள் மனைவியைப் பழி வாங்குவதாக நினைத்து, பெற்றப் பிள்ளையையே தீ வைத்துக் கொளுத்தப் போவதாக மிரட்டி, அவனை மனரீதியாக துன்புறுத்தியத் தந்தை கைதாகியுள்ளார்.
மகனோடு தலைமறைவாகும் முயற்சியிலிருந்த 35 வயது அந்நபர், மாரான் தேசிய இடைநிலைப் பள்ளிக்கு முன்புறமுள்ள பேருந்து நிலையத்தில் காரில் வைத்து நேற்றிரவு கைதானார்.
செப்டம்பர் 15-ஆம் தேதி சந்தேக நபரிடமிருந்து விவாகரத்துப் பெற்ற கையோடு, மகனை அவரிடமே விட்டு விட்டு வீட்டிலிருந்து வெளியேறிய மாதுவுக்கு, காரணமே இல்லாமல் மகனை அடித்து துன்புறுத்தும் வீடியோக்களை அவ்வாடவர் அனுப்பி வந்துள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை மீண்டுமொரு வீடியோ வந்துள்ளது.
அதை கண்டதும் தாய் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
வழக்கம் போல் அடித்து துன்புறுத்துவதோடு நிற்காமல் இம்முறை, மகனை தனியாக நிற்க வைத்து, அவனைச் சுற்றி தீ மூட்டி அவ்வாடவர் மிரட்டும் வீடியோவும் அதிலடங்கும்.
அதை பார்த்ததும் பதறிப் போன தாய், மகனின் பாதுகாப்புக் கருதி போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து அவ்வாடவர் கைதாகி 3 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
விவாகரத்து கொடுத்ததில் தனக்கு விருப்பமில்லை; இதனால் ஏற்பட்ட மன உளைச்சலிலேயேயே தாம் அவ்வாறு செய்ததாக போலீசின் தொடக்கக் கட்ட விசாரணையில் அவ்வாடவர் ஒப்புக் கொண்டார்.
3 வயது கூட ஆகாத அப்பையன், தன்னை சுற்றி நெருப்பு மூட்டப்பட்டு, நடுவில் பயத்தில் கதறியழும் காட்சிகள் முன்னதாக வைரலாகி நெஞ்சைப் பதற வைத்தன.