
சென்னை, செப் 30 – இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. டெலிபோனை வைத்து டைம் டிராவல் செய்யும் வித்தியாசமான கதைகளத்தில், காமெடி, காதல், கேங்ஸ்டர் காட்சிகள், என விறுவிறுப்பான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது.
இந்நிலையில், மும்பை சென்சார் போர்டில் லஞ்சம் கேட்பதாக நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை நேற்று முன் வைத்த காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘ வெள்ளித்திரையில் ஊழல் காட்டப்படுவது பரவாயில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் ஊழலை ஜீரணித்துக் கொள்ள முடியாது. குறிப்பாக. அரசு அலுவலகங்களில், CBFC மும்பை அலுவலகத்தில் இதுபோன்ற ஊழல்கள் மிகவும் மோசமாக நடந்து வருகிறது. மார்க் ஆண்டனி ஹிந்தி வெளியீட்டுக்கு 6.5 ரூபாய் லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது. இரண்டு பரிவர்த்தனைகள் மூலம் இதனை அனுப்பியதாகவும், திரைப்படம் திரையிடலுக்கு மூன்று லட்சம் ரூபாயும் சான்றிதழுக்கு 3.5 லட்சம் ரூபாயும் கொடுக்கப்பட்டது’ என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எனது கேரியரில் இந்த நிலையை நான் சந்தித்ததில்லை. மேனகா என்ற இடைத்தரகர் மூலம் பணம் அளிக்கப்பட்டதாக விஷால் தெரிவித்திருந்தார். இதனை மகாராஷ்டிராவின் முதலமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதை செய்வது எனக்காக அல்ல, எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக. நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு போவதா? இதற்கான ஆதாரமாக யாருக்கு பணம் அனுப்பப்பட்டது, என்கிற தகவல்களையும் நடிகர் விஷால் பகிர்ந்திருந்தார்.
இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.