
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 5 – கற்பழிப்பு தொடர்பில், கடந்த வாரம் முதல் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவனை, கடந்த சனிக்கிழமை இரவு மணி 11.30 வாக்கில்,வங்சா மாஜுவில் போலீசார் கைதுச் செய்தனர்.
கற்பழிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனனான அவ்வாடவன், விசாரணைக்காக ஆறு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, புக்கிட் அமான் பாலியல், பெண்கள் மற்றும் சிறார்கள் புலனாய்வுப் பிரிவின் தலைமை உதவி இயக்குனர் சித்தி கம்சியா ஹசான் தெரிவித்தார்.
தலைமறைவாக உள்ள எஞ்சிய நால்வர், இன்னும் தேடப்பட்டு வருவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, கடந்த புதன்கிழமை, அதிகாலை மணி 3.30 வாக்கில், பாதிக்கப்பட்ட பெண் தூக்கத்திலிருந்து விழித்த போது, அவரது கைகள் கட்டப்பட்டு, வாயில் ஒட்டு வில்லை ஒட்டப்பட்டிருந்ததை உணர்ந்தார்.
அதன் பின்னர், சொந்த மைத்துனர் உட்பட ஐவர் அவரை மாறி மாறி கற்பழித்த கொடூரம் ஈடேறியது.
அச்சம்பவத்தை ஒளிப்பதிவுச் செய்த அவர்கள், அதன் பின்னர் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.
அந்த ஐவரும் அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும், அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்வதாகவும், இதற்கு முன் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் அலாவுடின் அப்துல் மஜித் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.