
கோத்தா பாரு, செப்டம்பர் 14 – குவாலா கிராய் மாவட்ட கல்வி அலுவலக அதிகாரியைக் கொலை செய்ததாக, கப்பல் நிறுவனத்தின் பொறியியலாளருக்கு எதிராக, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
தமக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட போது, 46 வயது ஹருன் நரேசட் இப்ராஹிம், அது புரிவதைக் குறிக்கும் வகையில் தலை அசைத்தார்.
செப்டம்பர் மூன்றாம் தேதி, காலை மணி 11.30 வாக்கில், மாசாங்கிலுள்ள, உணவகம் ஒன்றில், 51 வயது துவான் முஹமட் சாலே துவான் இப்ராஹிம் என்பரை, அவ்வாடவர் அடித்துக் கொன்றதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்குக் குறையாத அல்லது 40 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையுடன், 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
இந்த வழக்கு, நவம்பர் 13 -ஆம் தேதி மீண்டும் செவிமடுக்கப்படும்.
முன்னதாக, கம்போங் ஹாலா கிராமத்தில் ஏற்பட்ட கைகலப்பில், அரசாங்க பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதாக, உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இரு கண்கணில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் விலா எலும்பு முறிவுக்கு இலக்கான அந்த 51 வயது அரசாங்க பணியாளர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.