
ஷா அலாம், ஜன 1 -, மிட்லன்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர் விடுதி 2023 புத்தாண்டில் 100 இந்திய மாணவர்கள் தங்கி பயில்வதற்குத் தயாராக இருக்கிறது. அதற்கான முழுச் செலவையும் மாநில அரசாங்கமும் கல்வியமைச்சும் ஏற்றுக் கொள்ளும் என்று சிலாங்கூர் மந்திரிபுசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்திருக்கிறார். 2024-ஆம் ஆண்டில் இவ்விடுதி முழுமையாக இயங்கும் எனவும் அவர் கூறினார். சிலாங்கூர் மாநிலத்தைப் பின்பற்றி இதர மாநிலங்களும் இந்திய மாணவர்களுக்காக தங்கும் விடுதிகளை நிறுவ வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். இவ்வேளையில் சிலாங்கூர் இந்தியர் ஆலோசக மன்றத்தினருக்குத் தமது பாராட்டினையும் அவர் தெரிவித்துக் கொண்டார். அண்மையில், சிலாங்கூர் இந்தியர் ஆலோசக மன்றம்(SICC), இல்ஹாம் கல்விக் கழகம் மற்றும் மிட்லன்ஸ் தமிழ்ப்பள்ளியின் வாரியக்குழு (LPS) ஆகியவற்றின் ஏற்பாட்டில் எஸ். பி. எம். இந்திய மாணவர்களுக்காக நடத்தப்பட்ட 3 நாள் கல்வி முகாமில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அமிருடின் ஷாரி இதனை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியுமான டாக்டர் குணராஜ் , கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் . சார்ல்ஸ் சந்தியாகோ ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 3 முக்கியத் தகவல்களை ஏற்பாட்டுக்குழுவின் ஆலோசகரும் சிலாங்கூர் இந்திய ஆலோசக மன்றத்தின் உறுப்பினருமான திரு. குணசேகரன் கந்தசுவாமி முன்வைத்தார். சிலாங்கூர் இந்தியர் ஆலோசக மன்றத்தின் 10 அம்ச கோரிக்கைகளில் 36 திட்டங்கள் வரையறுக்கப்பட்டன. அந்தத் திட்டங்களுள் ஒன்றான சிறப்புக் கல்வி முகாம் சிலாங்கூர் மாநிலத்தில் பயிலும் 70 எஸ்.பி.எம் மாணவர்களுக்கு , சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் நடத்தப்பட்டதாக குணசேகரன் தமதுரையில் குறிப்பிட்டார்.